‘‘இலைக்கட்சியுடன்தான் கூட்டணி என பேசினாலும் தென் மாவட்ட மலராத கட்சியினரின் புலம்பல் நாளுக்குநாள் அதிகரித்து வருதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி - மலராத கட்சி கூட்டணி என்று பரவலாக தலைவர்கள் பேசி வந்தாலும், தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாத குறையாகத்தான் இருதரப்பும் இருந்து வருதாம்.. குறிப்பாக, தூங்கா நகரத்தை பொறுத்தவரை புறநகர் மாஜி அமைச்சரோ, இலைக்கட்சியில் இருந்து விலகியவர்களை மட்டுமே அட்டாக் செய்து வருகிறாராம்.. வீடியோ வெளியிடுகிறாராம்.. ஆனால், தேர்தல் தொடர்பான ஆலோசனை மற்றும் கூட்டங்களுக்கு மலராத கட்சியினரை அவ்வளவாக அழைப்பதில்லையாம்.. அதேபோல தூங்கா நகர் உள்ளூர் மாஜியும், அவ்வப்போது சர்ச்சையாக பேசி வருகிறாரே தவிர, மலராத கட்சி நிர்வாகிகளிடம் அவ்வளவு ஒட்டாமல் தள்ளியே நிற்கிறாராம்..
தன் கட்சி மூத்த நிர்வாகிகளிடமும் கூட அவ்வளவாக பேசுவதில்லையாம்.. இவர்களில் டாடி பேச்சு புகழ் மாஜி பால்வளமோ, மலராத கட்சி தலைமையைத்தான் புகழ்கிறாரே தவிர, அக்கட்சி முக்கிய நிர்வாகிகளை நெருங்க விடுவதில்லையாம்.. சேலத்துக்காரர் மாவட்டந்தோறும் விசிட் அடித்தாலும், இலைக்கட்சியினரே சூழ்ந்து கொள்கின்றனர். மலராத கட்சி நிர்வாகிகளை புறந்தள்ளுகின்றனராம்.. தென்மாவட்டங்களில் மற்ற இடங்களிலும், இதே நிலையே தொடர்கிறதாம்.. நேற்று முளைத்த காளான் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் கூட்டணி தொடர்பாக பரபரப்பாக இருக்கும் சூழலில், நம்ம கூட்டணி இப்படி இருந்தால் எப்படி? உங்க ஆட்கள்கிட்டே பேசுங்க... இப்படியே போனால் நம்ம கூட்டணி 3, 4வது இடத்துக்குத்தான் போகணும்னு மலராத கட்சி முக்கிய தலைகள், இலைக்கட்சி முக்கிய தலைகளிடம் பேசியுள்ளனராம்.. ஆனால், பார்க்கலாம் என தலைமை கூறி விட்டதாக தென்மாவட்ட மலராத கட்சியினரிடம் புலம்பல் சத்தம் அதிகமாக கேட்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மூன்றாவது முறையும் ‘சாமி’க்கு சான்ஸ் கொடுக்க கூடாதுன்னு இலைக்கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்குறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவையை சேர்ந்த மசாலா பொடி பாக்கெட் வியாயாரி, இன்று இலைக்கட்சி சமஉ...வாக உயர்ந்து நகரில் கெத்து காட்டி வருகிறார். அன்று, சாதாரண ஸ்கூட்டரில் சென்ற இவர், இன்று சொகுசு காரில் வலம் வருகிறார். இவர், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியிலும், அதன்பிறகு கோவை வடக்கு தொகுதியிலும் இலைக்கட்சி சார்பில் போட்டியிட்டு, இருமுறை ச.ம.உ. ஆகி விட்டார். இதனால், கோடி மேல் கோடி குவித்து விட்டாராம்.. டாஸ்மாக் `பார்’களில் மூக்கை நுழைத்து இன்னமும் காசு பார்த்துக்கொண்டு இருக்கிறாராம்..
சில அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு, தொடர்ந்து வசூல் குவித்து வருகிறாராம்.. இவர், வருகிற சட்டமன்ற தேர்தலில், தனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு தருவார்கள் என்றும், அதற்கு, உள்ளூர் பிரபலம் எப்படியும் உதவி பண்ணுவார்.. இவர் தயவுல அந்த சாமீ... நமக்கு ஹாட்ரிக் வெற்றிக்கு வழிவகுப்பார் என பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம்.. ஆனால், இலைக்கட்சி நிர்வாகிகள் பலர், இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம்.. இவரை விட்டால், கட்சியில் வேற ஆள் இல்லையா? இதுவரை போட்டியிட வாய்ப்பு வழங்காதவர்களுக்கு இம்முறை சீட் கொடுக்க வேண்டும் என இவருக்கு எதிராக கொடி தூக்கி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோபிக்காரர் இடத்தை என்னால்தான் நிரப்ப முடியும்னு 9 ஆண்டுக்கு முன்பு இலைக்கட்சியை விட்டு நீக்கியவர் தூது விட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவருக்கு கோவை மண்டலத்திலிருந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் அந்த ரெண்டெழுத்து மீசைக்காரராம்.. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆனாலும், வேறு கட்சிக்கு போகாமல் கொள்கை பிடிப்போடு இருக்காராம்.. சிங்கிளாக இருந்தாலும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என, இலைக்கட்சி தலைவரை எதிர்த்து கோர்ட்டுக்கெல்லாம் போனாரு.. இடையில் பெங்களூருக்காரரு அமைத்த ஒருங்கிணைப்பு குழுவிலும் இணைஞ்சி செயல்பட்டாரு.. ஆனா, அந்த குழுவும் கலைந்து போனதுதான் மிச்சமாம்.. அவரது எண்ணமெல்லாம் எப்படியாவது இலைக்கட்சியோட ஐக்கியமாவது தானாம்..
இதனால கொங்கு மாஜி மணியிடம் சென்றிருக்காரு.. அவரோ டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருக்காரு.. இச்சூழ்நிலையில், கோபிக்காரர் வெளியே சென்ற நிலையில், அந்த இடத்தை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் என திடீரென எழுந்திருக்காரு.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலைக்கட்சிக்குள் நுழைவது தான் அவரது தீவிரமான எண்ணமா இருக்காம்.. இதனால பூசாரியிடம் மண்டியிடுவதை விட சாமியிடமே சரணடைந்து விடலாம் என்ற நினைப்பில், கட்சியில் சேர்த்துக்கோங்கன்னு இலைக்கட்சி தலைவருக்கு தூது விட்டிருக்காரு.. இலைமீதிருக்கும் விசுவாசத்தால் தான், வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் இருக்கேன்.. இலைக்கட்சி தலைவர் என்ன சொன்னாலும் கேட்பேன். அதிமுகவில் இணைத்துக் கொண்டால் மட்டும் போதும் என சொல்லியிருக்காரு..
அதோடு நானும் எம்ஜிஆர் காலத்துக்காரன். எனக்கும் பெரும் செல்வாக்கு இருக்குது.. கோபிக்காரர் இடத்தை நிரப்புவேன் எனவும் சொல்லியிருக்காரு.. ஆனால், இலைக்கட்சி தலைவரோ இருக்கிற பிரச்னைய சமாளிக்கவே பெரும் பாடாக இருக்குது.. கட்சியில் சேர்த்தால் 10 நாள் அமைதியாக இருப்பார். அடுத்த நாளே நான் தான் அதிமுக. என் பின்னால் தான் எல்லோரும் வருவார்கள் என்பார். அவருக்கு தினமும் பதில் சொல்ல எனக்கு சக்தி இல்லன்னு கூறி, அவரை சேர்த்துக்கொள்வதை தவித்து விட்டாராம்.. அதோடு மீசைக்காரரை சேர்த்துக் கொண்டால், இலைக்கட்சிக்கு ஒரு ஓட்டுதான் கூடுதலாகும்.. வேற எந்த பிரயோஜனமும் இருக்காது என இலைக்கட்சி தலைவரின் அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


