இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப் மூலம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தலைவன் கைது: திருவள்ளூர் மாவட்ட போலீசார் விசாரணை
சென்னை: சமூகவலைதளங்களான இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப் மூலம் மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தலைவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில், வடக்கு மண்டலத்தில், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்து வந்தனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முன்னீர்(28), மற்றும் ஜாவேத் (38) ஆகிய இரண்டு பேர் 5 கிராம் மெத்தாம்பெட்டமின் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டனர். இது குறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசராணையில் இவர்களில் ஒருவர் அடிக்கடி மும்பையிலிருந்து போதைப்பொருள் வாங்கி வந்து அதை பெங்களூரு மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி சென்னையில் டான்ஸ் ஸ்டூடியோ நடத்தி வந்த சிபிராஜ் (22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 54 கிராம் மெத்தாம்பெட்டமின் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவர் சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராமில் பல லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை கொண்டவர். இதையடுத்து தமிழ்நாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான தொடர்புகளை வெளிக்கொண்டு வருவதற்கும் மொத்த போதைப் பொருள் கும்பலின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஒரு சிறப்பு காவல் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் கும்பலின் தலைவன் டெல்லியில் வசிக்கும் ஒரு வெளிநாட்டு நபர் என்பதும், இணையதள பயன்பாடுகளின் மூலம் பரிவர்த்தனைகளை நடத்தியதும் கண்டறியப்பட்டது.
வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பணத்தை மேற்கு வங்கம், நாகாலாந்து, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நபர்களின் வங்கி கணக்குகளுக்கு செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தப்பட்டதும், சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரப்பகுதிகளில் முன்கூட்டியே மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருளின் ஜிபிஎஸ் குறிப்புகளை அனுப்பி வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் விசாரணையில், தமிழகத்தில் பலர் இந்த கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்ததும் கண்டறியப்பட்டது. இவர்களில் சுமார் 10 பேர் மெத்தாம்பெட்டமின், ஓஜி கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
இதில் இரண்டு பேர் வெளிநாட்டவர்கள். நைஜீரியா நாட்டை சேர்ந்த மைக்கேல் நம்நடி (43), நாமக்கலிலும், காங்கோ நாட்டை சேர்ந்த கபிதா யானிக் திஷிம்போ (36) சென்னையிலும் வசித்து வந்தனர். மேலும் கும்பலின் முக்கிய தலைவனை கைது செய்வதற்காக சிறப்பு காவல் குழு டெல்லி சென்று டெல்லி காவல்துறை உதவியுடன் நடத்திய சோதனையில் கும்பல் தலைவன், செனெகல் நாட்டை சேர்ந்த பென்டே (43) என்பவர் என தெரிந்தது. அவரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளைச் சார்ந்த விரிவான தகவல்கள் கொண்ட பல மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் பென்டே வட கிழக்கு மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் இருந்து போதைப்பொருள்களை வாங்கி மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு விநியோகித்தது கண்டறியப்பட்டது. பல சிம் கார்டுகள், போலி அடையாளங்கள் மற்றும் முன்னணி தொழிலகங்கள், துணி வணிக கடைகள் உள்ளிட்டவற்றின் மூலம் சட்டவிரோதப் பரிவர்த்தனைகளை நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி பென்டே டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரன்ட் பெற்று மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக திருவள்ளூருக்கு அழைத்து வரப்பட்டார்.
மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் சில ஆப்பிரிக்க நாட்டு நபர்கள், பல்வேறு ஆன்லைன் தளங்கள் வழியாக வாடிக்கையாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இக்கும்பலுக்கு துணைநிற்கும் போதைப் பொருள் விநியோகிப்பாளர்களின் மறைவிட பொறுப்பாளர்கள், வங்கி கணக்கு செயல்பாட்டாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை ஐஜி அஸ்ரா கார்க் பாராட்டினார்.

