லக்னோ : உத்தர பிரதேசத்தில், இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே குளித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் வீரன்கானா லட்சுமிபாய் ஜான்சி ரயில்வே நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில், பிரமோத் என்ற இளைஞர் ஒருவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதற்காக செய்த சம்பவம் பயணிகளை முகம் சுழிக்க வைத்தது. ரயில் பெட்டியின் கழிவறைக்கு வெளியே பயணிகள் நடந்து செல்லும் பாதையில், திடீரென வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து குளித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குவளை மூலம் எடுத்து தனது தலையில் ஊற்றி குளிக்கிறார். மேலும் அவர் சோப்பு, ஷாம்பு, பயன்படுத்தி குளிப்பது போன்று உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது. இணையத்தில் வைரலான வீடியோ அடிப்படையில், ரீல்ஸ் போட்ட ஜான்சி பகுதியைச் சேர்ந்த பிரமோத் என்ற இளைஞரை கைது செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சமூகவலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.
