45 வயதுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள், பெண் போலீசாருக்கு இரவுப்பணியில் இருந்து விலக்கு: போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு,முதன்முறையாக சென்னை காவல்துறையில் அமல்
சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சென்னை பெருநகர காவல்துறையில் 45 வயதுக்கு மேல் உள்ள பெண் இன்ஸ்பெக்டர்கள் முதல் பெண் காவலர்கள் வரை இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை சுழற்சி முறையில் இரவு பணி வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண் காவலர்கள் முதல் பெண் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
பெண் போலீசார் 45 வயதுக்கு மேல் குடும்ப சூழ்நிலை மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு பெண் போலீசாரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது போலீஸ் கமிஷனர் அருண் புதிய உத்தரவாக சென்னை பெருநகர காவல்துறையில் 45 வயதுக்கு மேல் உள்ள பெண் இன்ஸ்பெக்டர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள், பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமை காவலர்கள் அனைவரும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் தங்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு வேண்டும் என்று மனு அளிப்போருக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் உதவி கமிஷனர்கள் கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறையை மேல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் முதன்முறையாக சென்னை பெருநகர காவல் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போலீஸ் கமிஷனரின் இந்த உத்தரவுக்கு பெருநகர காவல்துறையில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.