தாராபுரம் : தாராபுரத்தில் வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ளது வடக்கு மின்வாரிய அலுவலகம். இங்கு, வணிக ஆய்வாளராக இருப்பவர் ஜெயக்குமார் (56). இவரிடம் தாராபுரம் அருகேயுள்ள இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சிவசுப்பிரமணியம் (36), தங்களுக்கு சொந்தமான வீட்டிற்கு நிரந்தர மின்இணைப்பு வழங்ககோரி விண்ணப்பம் அளித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்திய ஆய்வாளர் ஜெயக்குமார், நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3,500 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து சிவசுப்பிரமணியம், திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சிவசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். இதை, சிவசுப்பிரமணியம் ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் நேரில் கொடுத்தபோது மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜெயக்குமாரை கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரது அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம், தாராபுரம் வடக்கு மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.