சோதனையின்போது வீட்டிலிருந்த பெண்கள் மிரட்டல் காவல் உதவி ஆணையர் 2 ஆய்வாளர்களுக்கு அபராதம்: மாநில மனித உரிமைகள் ஆணையர் உத்தரவு
சென்னை: சோதனையின் போது வீட்டில் இருந்த பெண்களை மிரட்டிய விவகாரத்தில் காவல் உதவி ஆணையர் மற்றும் இரு ஆய்வாளர்களுக்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் வி.கே.குருசாமி என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில், எனக்கு எதிராக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்த காவல்துறையினர், என்னை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
எனது வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், எனது பேரனின் காது குத்து விழாவுக்கு வந்த மொய் பணம் 50 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு 18 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்ததாக கணக்கில் குறிப்பிட்டனர். இது சம்பந்தமாக புகார் தெரிவித்தால் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாக வீட்டில் இருந்த பெண் உறுப்பினர்களை மிரட்டினர். எனவே, பெண்களை மிரட்டிய மதுரை அப்போதைய உதவி ஆணையர் உதயகுமார், அப்போதைய காவல் ஆய்வாளர்கள் நாகராஜன், மணிகண்டன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், சோதனையின் போது வீட்டுப் பெண்களை மிரட்டியது மனித உரிமை மீறலாகும். எனவே, குருசாமிக்கு தமிழக அரசு இழப்பீடாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இந்த தொகையில், உதவி ஆணையர் உதயகுமார், ஆய்வாளர் நாகராஜன் ஆகியோரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் வீதமும், ஆய்வாளர் மணிகண்டன் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தாமல் கவனக்குறைவாக இருந்ததால் அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயும் அரசு வசூலித்துக் கொள்ள வேண்டும். மூன்று பேருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.