Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பணியில் உள்ள ஆசிரியர்கள் சிறப்பு தகுதித்தேர்வு எழுத வேண்டும்: பள்ளி கல்வித்துறை அரசாணை

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பின் அடிப்படையில் பணியில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் ஆணையிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி உச்சநீதி மன்றத்தில் சிறுபான்மையினர் தரப்பில் ெ தாடரப்பட்ட வழக்கில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையெதிர்த்து தமிழக அரசின் சார்பில் சிறப்பு அனுமதி விடுப்பு மனு(SLP) தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிறகு, மேற்கண்ட தீர்ப்பின் அடிப்படையில் அதிக அளவில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அதனால் தொடர் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட பயன்கள் பாதிக்கப்படும் என்றும், அதனால் மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்த உரிய ஆணை வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினார்.

மேலும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசுப் பள்ளிகள், மாநகராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் மேற்கண்ட தகுதித் தேர்வில் இதுவரை தகுதி பெறாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வீதம் 3 முறை சிறப்பு ஆசிரியர்தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். எனவே இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆணையிட வேண்டும் என்றும் தொடக்க கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்களின் கருத்துகளை பரிசீலனை செய்து அவற்றை ஏற்று தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் 2026ம் ஆண்டில் ஜனவரி, ஜூலை 2026 மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. 2026ம் ஆண்டு தேர்வு முடிவுகளின் ஆய்வுக்கு பிறகு மீதம் தேர்ச்சி பெறவேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027ம் ஆண்டில் தேவைக்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.