Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூச்சிகள் (Insects)

பூச்சி என்பது ஆங்கிலத்தில் Insect என்று சொல்லப்படுகிறது. இது இலத்தீன் மொழியில் உள்ள சொல்லான insectum என்பதிலிருந்து தோன்றியது. உலகில் பலவகையான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. அவற்றுள் பெரும்பகுதி பூச்சி இனங்களேயாகும். உலகில் சுமார் ஒன்பது லட்சத்துக்கு மேற்பட்ட பூச்சி இனங்கள் இருப்பதாகவும், இவற்றுள் சுமார் ஏழு லட்சம் பூச்சி இனங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பூச்சி இனங்களுள் பெரும்பாலானவை மனிதர்களுக்குச் சுகாதாரக் கேடுகளையும், தாவரங்களுக்குப் பலவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துபவையாகும். ஆனால், அவற்றுள்ளும் பட்டுப்பூச்சி, அரக்குப் பூச்சி, தேனீக்கள் போன்ற ஒரு சில பூச்சிகள் மனிதர்களுக்கு நன்மை செய்பவையாக உள்ளன. இங்கு ஒரு சில பூச்சிகளைப் பற்றி சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

மின்மினிப் பூச்சி (Firefly)

சில உயிரினங்கள் பார்ப்பவர்களை கவரக்கூடியவையாக இருக்கும். அந்த வரிசையில் மின்மினிப் பூச்சியும் ஒன்று. சிறிய உருவமாக இருந்துகொண்டு அதன் ஒளியால் கவரக்கூடிய மின்மினிப் பூச்சிகளை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்ப்போம். மின்மினிப் பூச்சி அல்லது கண்ணாம் பூச்சி (Firefly) என்பது வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சியாகும். மின்மினிப் பூச்சிகள் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. மின்மினிப் பூச்சிகள் ஒளி வீசக் காரணம் அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள லூசிஃ பெரேஸ் எனும் என்சைமே ஆகும். மின்மினிப் பூச்சிகளின் உடலில் உள்ள வேதி ஆற்றல் ஒளி ஆற்றலாக மாற்றப்படுவதால் ஒளி வீசுகிறது. இப்பூச்சிகள் தங்கள் இணையை ஈர்ப்பதற்காகவே ஒளியை பரப்புகின்றன.

மின்மினிப் பூச்சிகளின் சிறப்பு என்னவென்றால் மின்மினிப் பூச்சிகள் இரையை பிடித்தவுடன் அதை அப்படியே சாப்பிடாது. இரையை முதலில் மயக்கம் அடையச் செய்யும். இதற்காக அதன் முன் பகுதியில் பிரத்தியேகமாக ஒரு கொடுக்கு உள்ளது. மயக்கம் அடையச் செய்து இரையின் உடல் கூழ்மமாக மாறியவுடன் அதனை நீரைக் குடிப்பது போன்று உறிஞ்சி குடித்து விடும்.

பெண் பூச்சிகளைக் காட்டிலும் ஆண்பூச்சிகளே அதிகமாக ஒளியை வெளியிடும். மின்மினிப் பூச்சிகளின் ஆயுட்காலம் 2 மாதங்கள்தான். இவற்றால் வேகமாகப் பறக்க முடியாது. இவற்றைப் போன்றே உலகில் சில தாவரங்கள், சில வகைக் காளான்கள், சில வகை மீன்கள் கூட இயற்கையாகவே ஒளியை உமிழும் தன்மையை பெற்றிருக்கின்றன.

பொன்வண்டு (Sternocera)

இன்றைய காலகட்டத்தில் காணக்கிடைக்காத அரிய வகை உயிரினங்களில் ஒன்றாக மாறிவிட்டது பொன்வண்டு. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கூட பொன்வண்டுகளை அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது இதனைக் காண்பது அரிதிலும் அரிது. கொடுக்காப்புளி மரம்தான் அதிகளவில் பொன்வண்டுகளின் இருப்பிடமாக இருந்தது. இன்றோ கொடுக்காப்புளி மரத்தையும் பார்க்க முடியவில்லை, பொன்வண்டுகளையும் பார்க்க முடியவில்லை. அப்படியே இருந்தாலும் கிராமப்புறங்களில் எங்கோ ஓரிடத்தில் ஒன்றோ இரண்டோதான் கண்களில் படுகிறது.

பொன்வண்டின் முதுகுப்புறத்தில் உலோகம் போன்ற பச்சை கலந்த தங்கநிறத்திலான ஓடு மின்னுவதைப் போல் இருக்கும். இது ஒன்றே போதும் இதன் அழகை எடுத்துரைப்பதற்கு. இதற்கு பொன்வண்டு என்ற பெயர் வந்ததற்கு காரணமும் இந்தப் பொன்னிற ஓடுதான். மேலும் இந்த பொன்வண்டுகள் மெல்லிய இரு கால்களால் நகர்ந்து செல்வதும், இறக்கைகள் கொண்டு பறப்பதும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதனுடைய முட்டை, கோழிமுட்டையைப் போல் கோளவடிவத்தில் இருந்தாலும் அளவில் மிகவும் சிறியதாக இருக்கும். 1990-களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கடைசியாக பொன்வண்டுகளை கைகளில் ஏந்தும் பாக்கியம் கிடைத்திருக்க கூடும். அதன் பிறகுதான் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில், இயற்கையை மெல்ல மெல்ல அழித்து கட்டட காடுகளாக்கிவிட்டோம். ஒருவேளை இனி எப்போதாவது பொன்வண்டைக் காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், நிச்சயம் அதன் அழகு உங்களையும் கவர்ந்திழுக்கும்.

வண்ணத்துப்பூச்சி (butterfly)

பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களுடன் இறக்கைகள்கொண்ட பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதால் இவற்றை வண்ணத்துப்பூச்சி எனவும் அழைகின்றனர். இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், இங்கும் அங்குமாகப் பல இடங்களிலும், மலர்களிலும் அமர்ந்து பின் சிறகடித்துப் பறப்பது காண்பவர்களைக் கண்டுகளித்து இன்புறச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பி நிலையில் புழுவாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாக உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், தெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். அதன்படி பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.