Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பூச்சிகளை அழிக்கும் குளவிகள்!

உயிரி பூச்சிக்கொல்லிகள்

ரசாயன பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதோடு, பயிர்களும் ரசாயன நஞ்சு கலப்போடு உற்பத்தி ஆகின்றன. அவற்றை உண்ணும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை உணர்ந்த பலர் தற்போது இயற்கை முறையில் பூச்சிவிரட்டிகளை தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் உயிரி பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உயிரி பூச்சிக்கொல்லி காரணிகள், அவற்றின் பண்புகள், அவற்றை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக சில தகவல்களை இந்த இதழில் காண்போம்.

உயிரி பூச்சிக்கொல்லிகள் என்பவை பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் வாழ்வியல் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, பயிர் சேதத்தை குறைக்கும் உயிரினங்களாகும். பூச்சிகளின் இயற்கை எதிரிகளான ஒட்டுண்ணி, இரை விழுங்கி, பூஞ்சாணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற உயிரினங்களே உயிரி பூச்சிக்கொல்லி காரணிகள். இந்தக் காரணிகளைப் பாதுகாத்து, பராமரித்து ஆய்வுக்கூடத்தில் இனவிருத்தி செய்து நிலத்தில் உபயோகிக்கலாம்.பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் சில உயிரி பூச்சிக்கொல்லி காரணிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிரைக்கோடெர்மா 60-90 சதவீதம், கிரிப்டோலேமஸ் 100 சதவீதம், என்பிவி 70-80 சதவீதம், டிரைக்கோடெர்மா விரிடி 60-90 சதவீதம் கட்டுப்படுத்துகின்றன என தெரியவந்துள்ளது.

உயிரி பூச்சிக்கொல்லி காரணிகளுக்கு சில சிறப்பு பண்புகள் உள்ளன. அவை மாறுபட்ட மண் மற்றும் தட்பவெப்ப சுற்றுச்சூழலில் நிலைத்து நின்று, செயல்படக்கூடிய தன்மை கொண்டவை. செயல்படும் விதம், ஒவ்வொரு நோய்க்காரணிகள், ரசாயனத் தன்மை மற்றும் கொல்லும் விதம் மாறுபடும். இயற்கை எதிரிகளை உபயோகிக்கும்போது வேகமாகப் பரவி எளிதில் பூச்சிக்கொல்லிகளை அழிக்க உதவும்.

தொழில்நுட்பஆலோசனைகள்

பூஞ்சாணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றை வைத்து உயிரிப் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்ய சிறந்த தொழில்நுட்பங்கள் அவசியம். பெரிய அளவில் உற்பத்தி செய்ய திறமை வாய்ந்த ஆட்கள் தேவை. இவ்வாறு அறிவியல் பூர்வமான நிலையம் அமைக்க திட்ட இயக்ககம், உயிரிக்கட்டுப்பாடு, ஐசிஏஆர் - பெங்களூரு, இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் - பெங்களூரு, மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் - பெங்களூரு, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் - நாக்பூர் ஆகிய மையங்களை அணுகலாம். இந்த மையங்களில் உயிரி பூச்சிக்கொல்லி காரணிகளை உற்பத்தி செய்ய ஆலோசனையும், பயிற்சியும் பெறலாம்.

டிரைக்கோடெர்மாவும்,டிரைக்கோகிராம்மாவும்

உயிரி பூச்சிக்கொல்லி காரணிகளில் டிரைக்கோடெர்மாவும், டிரைக்கோகிரம்மாவும் முக்கியமானவை. இதில் டிரைக்கோடெர்மா இனம் முட்டை ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த உயிரிப் பூச்சிக்கொல்லியாகும். இவை பருத்திக் காய்ப்புழு, கரும்பில் தண்டு துளைப்பான், பழம் மற்றும் காய்கறிகளில் காய்த்துளைப்பான்களைக் கட்டுப்படுத்த பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. டிரைக்கோகிரம்மா, முட்டையைத் தாக்கி அழிப்பதால், புழுக்களின் தாக்குதல் தவிர்க்கப்படுகின்றது. பூச்சிக்கொல்லி உபயோகிப்பதை விட குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடும் கிடைக்கிறது. இந்தியாவில் இரண்டு இனங்கள் அதாவது டி.கைலோனிஸ் மற்றும் டி, ஆப்போனிக்கம் ஆகியவை அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

டிரைக்கோகிரம்மா என்பது குறு குளவி இனம் ஆகும். இதில் பெண் குளவி 20-40 முட்டைகளை, மற்ற பூச்சிகளின் முட்டைகளின் மேல் இடும். இதன் வாழ்நாள் 8-12 நாட்களுக்குள் முடிந்துவிடும். சிறு குளவிகள் பிறப் பூச்சிகளின் முட்டையினுள் முட்டையிடுவதால், 3-4 நாட்களுக்குள் அதன் முட்டை கருப்பாக மாறிவிடும். டிரைக்கோகிரம்மாவின் முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் மற்ற பூச்சி முட்டையின் கருவை உண்டு வளர்ந்து முதிர்ந்த குளவிகள் அம்முட்டையில் இருந்து வெளிவரும். ஒரு டிரைக்கோகிரம்மா விருத்தியடையும்போது, குறைந்தபட்சம் 100 முட்டைகளை அழிக்கும் வல்லமை பெறும்.

தேவையான கருவிகள்

கார்சிரா கூடுகள், தட்டு, இரும்பு அலமாரி, வெப்பக்காற்று சூட்டடுப்பு, காற்று குளிர்விப்பான், புற ஊதாக்கருவி, முட்டை அடைகாத்து குஞ்சு பொரிக்கும் பெட்டி, பெருக்கப்பெட்டி, அரவை இயந்திரம், இனச்சேர்க்கை அறை, ஜாடிகள், குளிர்சாதன பெட்டி, கம்பி வலைகள் போன்றவை கார்சிரா வளர்ப்பிற்கும், டிரைக்கோடெர்மா உற்பத்திக்கும் தேவைப்படும். இவற்றை சேகரித்து, முறையான பயிற்சியைப் பெற்று டிரைக்கோடெர்மா உற்பத்தியில் இறங்கலாம்.