மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ரிதன்யா, ‘வைப்ரன்ஸ் ஹப்’ என்ற புதுமையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ (www.vibrancehub.org) என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இதன்மூலம் மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க முடியும். தான் உருவாக்கியிருக்கும் புதிய இணையதளம் பற்றி மாணவி ரிதன்யா கூறுகையில், ‘‘செயற்கை நுண்ணறிவு காலத்தில் தகவல்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை சிந்தித்து படைப்பாற்றலாக மாற்றும் வழிகாட்டி தேவைப்படுகிறது. அதற்காகவே ‘வைப்ரன்ஸ் ஹப்’ உருவாக்கப்பட்டது. இந்த மொபைல் ஆப்பில், செயற்கை நுண்ணறிவுக் காலத்திற்கு ஏற்பத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் சிந்திக்கும் படைப்பாற்றலை குறைக்குமோ என்ற அச்சம் எழுந்திருக்கும் நிலையில், வைப்ரன்ஸ் ஹப் செயலி மக்களின் சிந்தனைத் திறனை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வைப்ரன்ஸ் ஹப், அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் லைப் டைம் கிண்டர்கார்டன் பிரேம் ஒர்க்கின்படி ஆர்வம், திட்டங்கள், தோழமை, விளையாட்டு ஆகிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.
புத்தக அறிவை மட்டுமல்லாது, சிந்தனைத்திறன், தன்னம்பிக்கை மற்றும் குழு ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்க்கும் கருவியாக மாணவர்களுக்கு உதவும் வகையில் வைப்ரன்ஸ் ஹப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் குழுவாக இணைந்து திட்டங்களை உருவாக்கலாம். வாரந்தோறும் பிரச்னை தீர்க்கும் அமர்வுகள், ஆரோக்கிய பராமரிப்புக்கான வழிகாட்டுதல், ‘ரஸ்டி’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட் பாட் உரையாடல், உதவியாளர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் தங்கள் திட்டங்களுடன் சேர்த்து தூக்கம், மன அழுத்தம், எண்ணப்பதிவுகள் போன்றவற்றையும் பதிவு செய்யலாம். இத்தளம் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.’’ என்று தெரிவித்தார்.


