Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மான்களிடமிருந்து மக்காச்சோளப் பயிர்களை பாதுகாக்க நூதனமுறையில் தடுப்பு நடவடிக்கை

*வயல்களில் தொங்கவிடப்பட்டுள்ள பளபளக்கும் ஸ்டிக்கர்கள்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் மான்களின் தொல்லைசில்வர், கோல்டு வண்ணங்களில் பளபளக்கும் தோரணங்களை வேலிகளாக அமைத்து மக்காச்சோள வயலுக்குள் மான்கள் புகாமல் நூதன முறையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுக்காவில் அரசலூர், வெண்பாவூர், பாண்டகப்பாடி, மாவிலிங்கை, கை.களத்தூர், அய்யனார் பாளையம், காரியானூர், ரஞ்சன்குடி, பெரம்பலூர் தாலுக்காவில் இரட்டைமலை சந்து, நாவலூர், புலியூர், களரம்பட்டி, சத்திர மனை, குன்னம் தாலுக்காவில் சித்தளி, பேரளி, முருக்கன்குடி, ஆலத்தூர் தாலுக்காவில் பாடாலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சமூக வனக்காடுகள் மற்றும் காப்புக்காடுகள் உள்ளன.

இவற்றில் 400க்கும் மேற்பட்ட அரிய வகை புள்ளி மான்கள், கிளைமான்கள் வசித்து வருகின்றன. வனப் பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப் பாடு காரணமாக மான்கள் அருகில் உள்ள கிராமங்களை சார்ந்த வயல் பகுதிகளுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நெல், கம்பு மற்றும் சிறு தானிய பயிர்களை மேய்ந்தும் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. குறிப்பிட்ட பரப்பளவுக்கு மேல் பயிர்களை நாசம் செய்தால் மட்டுமே சிறிதளவு இழப்பீடாவது பெற்றுத் தர முடியும் என வனத்துறை கைவிரிப்பதால், மான்களால் பாதிக்கப்பட்ட பலரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

அதேசமயம் புதிதாக மக்காச் சோளப் பயிர்களைப் பயிரிடும் மக்காச்சோள சாகுபடியாளர் கள் எப்படியாவது மான்களிடமிருந்து பாதுகாக்க வேண்டுமே என வயல்களிலேயே கொட்டகை அமைத்தது தங்கிக் கொள்வதும், இரவிலும் பகலிலும் மான்கள் வராமல், வயலுக்குள் புகுந்து சேதம் விளைவிக்காமல் பயிர்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காகவே ஏற்கனவே டம டம டமவென அலாரம் அடிப்பதுபோல்ஒலிக்கக்கூடிய பேட்டரி உபகரணங்களை பயன்படுத்தி வந்த விவசாயிகள், தற்போது நூதனமாக வயல்களை சுற்றி கயிறுகட்டி வேலி அமைப்பது போல் செய்து, அந்தக் கயிறுகளில் சில்வர், கோல்டு வண்ணங்களில் பளபளக்கும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர்களை தோரணம் போல் ஒட்டித் தொங்கவிட்டு, மான்களின் கண்களுக்கு ஏதோ குறுக்கே தடை இருப்பதை உணர்த்தும் விதமாகவும், காற்று அடித்தால் இடைவிடாமல் சலசலக்கும் ஓசை மான்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளதால் இதுபோல் தோரணம் கட்டிய வயல்களுக்குள் போகவே மான்கள் அச்சப்பட்டு சென்று விடுவதால் பயிர்கள் பச்சை பசேலென பாதிப்பின்றி வளர்ந்து வருகின்றன.

இந்த நூதன முறை அதிக செலவின்றி கை கொடுப்பதால், பல்வேறு மக்காச்சோள விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு இது போன்ற நூதன தோரணங்களை வேலிகளாக அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.