Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அநீதிகளை அடையாளம் காட்ட வழிவகுக்கிறது; சட்டங்கள் இல்லாவிட்டால் அடிப்படை உரிமைகள் கூட மனிதனுக்கு கிடைக்காது: விழிப்போடு இருந்தால் விடியல் நிச்சயம்

சட்டம் என்பது என்ன? அது யாரால் உருவாக்கப்பட்டது? சட்டத்தை நாம் பின்பற்றியே ஆக வேண்டுமா? என்ற கேள்விகளும், அது சார்ந்த எண்ண ஓட்டங்களும் எப்ேபாதும் மக்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஏழை, எளியோர், வலியோர், சிறியோர் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் சமநீதியை வழங்குவதற்கான ஒரு அரிய கோட்பாடு தான் சட்டம். இது சமூக கட்டுப்பாடு, தனிநபர் மற்றும் குழு நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகளை குறிக்கிறது. சட்டம் பல நோக்கங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. அமைதியை நிலைநாட்ட உதவுகிறது. சமூகத்தில் வன்முறைகளை தடுக்கிறது. மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறது. தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயகத்தை உறுதி செய்து, ஒரு அரசையே உருவாக்கும் உரிமையை மக்களுக்கு தந்திருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் தான்.

சட்டங்கள் இல்லாவிட்டால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட சரியாக கிடைக்காது என்கின்றனர் சட்டம் சார்ந்த நிபுணர்கள். இப்படி சமூகத்தில் நம்மை கம்பீரமாக வழிநடத்திச் செல்லும் சட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பெருக வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்டத்தின் பயன்கள் சென்று ேசர வேண்டும். இலவசமாக கிடைக்கும் சட்டங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டு தோறும் நவம்பர் 9ம் தேதி (இன்று) தேசிய சட்ட சேவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் சட்டம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் போதிய அளவில் உள்ளதா? என்றால் அதற்கான விடை கேள்விக்குறி தான். ‘சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதமே விளக்கு’ என்றார் பேரறிஞர் அண்ணா. அவரது கூற்றைப்போலவே ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு சட்டம் என்பது இன்றளவும் இருட்டறையாகவே உள்ளது.

அவர்களின் வாழ்வில் இருள்விலக உணவு, உடை, இருப்பிடம், வேலை போன்று சட்டவிழிப்புணர்வும் மிகவும் அவசியம் என்கின்றனர் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள். இதுகுறித்து சட்டம் சார்ந்த சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: கல்வியறிவின்மை என்பது ஒரு நபரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கும். இந்த கல்விஅறிவு இல்லாத பாமர மக்களுக்கு கூட சட்டம் சார்ந்த விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியம். இந்த அறிவும், விழிப்புணர்வும் ஓரளவு இல்லாவிட்டாலும் சமூகத்தில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை அடையாளம் காணமுடியாமல் போய்விடும். சட்டம் சார்ந்த அடிப்படை மனிதஉரிமைகள் குறித்து அறியாமல் இருப்பதே இதற்கு காரணம். இதேபோல் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு இல்லாததால் அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

அரிய சமூக நலத்திட்டங்கள் பல இருந்தும் அது முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. இதற்கு அவர்களிடம் அடிப்படை சட்டவிழிப்புணர்வு இல்லாததும், அல்லது ஏற்படுத்தப்படாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம். நமக்கு தீங்கு இழைப்பவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் சட்டத்தின் துணையோடு அவர்களுக்கு தக்கபாடம் புகட்ட முடியும். இதற்கு உதாரணமான சம்பவங்கள் நாடு முழுவதும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. வழக்கறிஞரின் சிறந்தவாதம் தான், ஒருவருக்கான நீதியை பெற்றுத்தருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த வழக்கறிஞரை அணுகும் பாதிக்கப்பட்ட நபர், ஓரளவு சட்டவிழிப்புணர்வு உள்ளவராகவும் இருப்பது பல்வேறு வழக்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதவாழ்க்கைக்கு தேவைப்படாத அல்லது விலக்கி வைக்கப்பட ேவண்டியவை எல்லாம் அவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.

ஆனால் சமூகத்தில் சக மனிதர்களோடு கம்பீரமாக நடைபோட வைக்கும் சட்டம் சார்ந்த விழிப்புணர்வும், அதன் சேவைகள் எளிதாக கிடைப்பது இன்றுவரை குதிரைக்கொம்பாகவே உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களிடமும் சட்டம் சார்ந்த அடிப்படை அறிவு குறித்த பெரும்விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அது சார்ந்த அனைவருக்குமான கடமையாக இருக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

பாதிப்புகளுக்கு தீர்வு தரும் பல சட்டங்கள்

‘‘இந்தியாவில் சாலைபோக்குவரத்து சட்டம் (2015), தகவல் தொழில்நுட்ப சட்டம் (2000), நிலஅபகரிப்பு சட்டம்(2011), நிலசீர்திருத்தசட்டம்(1961), நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் (2013), பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்(2012), பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம் 1992) பொதுச்சேவைகளை பெறும் உரிமை சட்டம், மருத்துவ கருக்கலைப்பு சட்டம்(1971), மோட்டார் வாகனச்சட்டம், வணிக குறியீடுகள் சட்டம் (1999)வன்கொடுமை தடுப்புச்சட்டம், வருமான வரிச்சட்டம்(1961) அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம், இந்தியக்கூலி வழங்கல் சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம்(1988), குழந்தை தொழிலாளர் சட்டம் என்று ஏராளமான சட்டங்கள் உள்ளது. மனிதர்களுக்கு மட்டுமன்றி உயிரினங்களுக்கான சட்டங்களும் அமலில் உள்ளது. மேற்கண்ட சட்டங்களை அடிப்படையாக வைத்தே பாதிக்கப்பட்டோருக்கு உரிய தீர்ப்பை நீதிமன்றங்கள் அளித்து வருகிறது,’’ என்கின்றனர் மூத்த சட்டஆலோசகர்கள்.

இலவச உதவிக்கு அரசு ஆணையம்

ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்தின் முன்பு அனைவரும் சரிசமம். ஏழைகள், எழுத்தறிவு இல்லாதவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள இலவச சட்டஉதவி அளிக்க வேண்டும். இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 39-ஏ.,மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றி வைக்க இந்திய அரசு, தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தை 1987ம் ஆண்டு ஏற்படுத்தியது. இதேபோல் இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும், உரிய நிவாரணம் பெறுவதற்கும் லோக் அதாலத்துகள் (மக்கள்நீதிமன்றங்கள்) என்ற அமைப்பை, உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் 1986ம் ஆண்டு முதல் சட்டப்பணிகள் ஆணையம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களிடம் விழிப்புணர்வு தேவை

‘‘இனிவரும் காலங்களில் கம்ப்யூட்டர் அறிவும், நவீன உபகரணங்களை செயல்படுத்தும் திறனும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டியது அவசியமாக மாறக்கூடும். அதேபோல் அதிகரிக்கும் மக்கள் தொகையும் பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக அமையும். இவை அனைத்தையும் சமாளித்து சராசரி மனிதராக வாழ்வதற்கு கல்வி மட்டுமே போதாது. நிச்சயமாக சட்டங்கள் குறித்த அடிப்படை அறிவும் தேவை என்ற நிலை உருவாகும். இதை கருத்தில் கொண்டு பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது இந்த விழிப்புணர்வானது ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது. மாணவர்களுக்கு கிடைக்கும் சட்டவிழிப்புணர்வு, அவர்கள் மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சென்று சேரும்,’’ என்கின்றனர் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கும் வழக்கறிஞர் கூட்டமைப்பினர்.