Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜிம்மில் பயிற்சியின் போது முழங்காலில் காயம்; கடைசி 2 டெஸ்ட்டில் இருந்து நிதிஷ்குமார் விலகல்: இந்திய அணிக்கு திடீர் சிக்கல்

மான்செஸ்டர்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் கொண்ட `ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’யில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டி முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் நாளை மறுநாள் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்குகிறது. இந்நிலையில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயத்தில் சிக்கியதால் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. 2வது டெஸ்ட்டில் 10 விக்கெட் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த ஆகாஷ் தீப், இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்படுகிறார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு சமீபத்திய பயிற்சியின் போது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக `பேண்டேஜ்’ அணிந்துள்ளார். அவரின் காயம் குணமாக 10 நாள் ஆகும் என தெரிகிறது. இதனால் இருவரும் மான்செஸ்டர் டெஸ்ட்டில் விளையாட முடியாது என்ற நிலையில், ஹரியானாவை சேர்ந்த 24 வயது வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நிதிஷுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேனில் அவரின் முழங்காலில் தசைநார் சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து எஞ்சிய 2 போட்டியில் இருந்தும் அவர் விலகி உள்ளார். துணை கேப்டன் ரிஷப் பன்ட், இடது கட்டை விரலில் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் 3வது டெஸ்ட்டில் அவர் கீப்பிங் செய்யவில்லை. 4வது டெஸ்ட்டிலும் அவர் களம் இறங்குவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அடுத்தடுத்து வீரர்கள் காயத்தில் சிக்குவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்திய அணி உள்ள நிலையில், சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கால்பந்து அணியுடன் சந்திப்பு:

4வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் நேற்று முன்தினம் மான்செஸ்டர் சென்றடைந்தனர். நேற்று மழை காரணமாக இந்திய வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் ஜிம்மில் பயிற்சி செய்தனர். ஆனால் கில், ராகுல், பும்ரா ஆகியோர் பயிற்சியில் பங்கேற்க வில்லை. இதனிடையே மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியினரை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியினர் அவர்களுடன் ஜாலியாக உரையாடினர். அத்துடன் இரு அணிகளும் தங்களது ஜெர்சியை மாற்றிக்கொண்டு குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மான்செஸ்டர் கால்பந்து வீரர் ஹாரி மாகுயர் பேட் செய்ய சிராஜ் பந்துவீசினார். இதேபோல் இந்திய அணியினரும் கால்பந்து ஆடினர்.

வரலாற்றை மாற்றுமா இந்தியா?

இந்திய அணி இதுவரை டெஸ்ட்டில் வெற்றிபெற முடியாத 4 மைதானங்களில் மான்செஸ்டரும் ஒன்று . இங்கு 1936ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்தியா 9 டெஸ்ட்டில் விளையாடி 4ல் தோல்வி கண்டுள்ளது. 5 போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக டோனி தலைமையிலான இந்திய அணி 2014ம் ஆண்டு இங்கு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அண்மையில் பர்மிங்காமில் இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட்டில் வென்ற நிலையில், மான்செஸ்டரிலும் முதல் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.