சென்னை: ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் விலகினார். வரும் டிசம்பரில் தொடங்கும் சீசனில் சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி இருந்த நிலையில், முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் பிக் பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கதாக மாறியுள்ளது. ஏனெனில் இதுவரை எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் பிக் பாஷ் தொடரில் விளையாடியதில்லை.
பிக் பாஷ் தொடர் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் அணிகள் தற்போதிலிருந்தே தயாராகி வருகின்றன. இந்நிலையில் காயம் காரணமாக பிக் பாஷ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு சிட்னி தண்டர் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
பிக் பாஷ் தொடரில் இருந்து விலகல் குறித்து அஷ்வின் தெரிவித்துள்ளதாவது; "வரவிருக்கும் சீசனுக்குத் தயாராவதற்காக சென்னையில் பயிற்சி மேற்கொண்டபோது, என் முழங்காலில் வலி ஏற்பட்டது. அதன் விளைவாக நான் பிக் பாஷ் தொடரில் இருந்து விளக்குகிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும் இத்தொடரிலிருந்து விலகியதாக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
2025-26 பிக் பாஷ் தொடர் டிசம்பர் 14 முதல் தொடங்குகிறது. சிட்னி தண்டர் அணி, டிசம்பர் 16ஆம் தேதி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.
 
 
 
   