புதுடெல்லி: 54 தனியார் பல்கலைக்கழகங்கள் கட்டாய தகவல்களை சமர்ப்பிக்கவில்லை என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. 1956ம் ஆண்டு யூஜிசி சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் பல்கலைக்கழகங்கள் கட்டாயத் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பல முறை அறிவுறுத்திய பின்னரும் சில பல்கலைக்கழகங்கள் இவற்றை சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில் ஆய்வு நோக்கங்களுக்காக தொடர்ந்து மின்னஞ்சல்கள் மற்றும் ஆன்லைன் கூட்டங்கள் மூலமாக பல நினைவூட்டல்களை மேற்கோள்காட்டி பதிவாளரால் முறையாக சான்றளிக்கப்பட்ட துணை ஆவணங்களுடன் விரிவான தகவல்களை சமர்ப்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக செயலாளர் மணீஷ் ஜோஷி கூறுகையில்,‘‘நிரப்பப்பட்ட வடிவம் மற்றும் முகப்பு பக்கத்தில் ஒரு இணைப்பை கொடுத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல்களை அணுகும் வகையில் வலைத்தளத்தில் பதிவேற்றவும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வலைதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பதிவு அல்லது உள்நுழைவு தேவையில்லாமல் முகப்பு பக்கத்தில் அனைவரும் எளிதாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். கூடுதலாக, எளிதான வழிசெலுத்தலுக்கான தேடல் வசதி இருக்க வேண்டும்” என்றார். இவ்வாறு செய்யத்தவறிய 54 பல்கலைக்கழகங்களின் பட்டியலை யூஜிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.