பெரம்பூர்: சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் மலர் (35). இவரது கணவர் ராஜா. இவர் கொத்தனார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். இதனால் இவர்களது மூத்த மகள் தாயுடனும் இளைய மகள் தந்தை ராஜாவுடனும் வசித்து வந்தனர்.
இந்தநிலையில், ராஜா 2வதாக சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சங்கீதாவின் உறவினர்ஒருவருக்கும் ராஜாவின் இளைய மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக அவரது தாய் மலருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தாய், உடனே குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பின் அலுவலர் சங்கீதா தலைமையிலான குழுவினர் வந்து கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் இருந்த ராஜாவின் 14 வயது மகளை பத்திரமாக மீட்டு எம்கேபி. அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து புகாரின்படி, எம்கேபி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


