திருச்சி: திருச்சியை சேர்ந்த பெண் 300 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார். 22 மாதங்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கி பிஞ்சு குழந்தைகளின் பசியை போக்கிய பெண். திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வபிருந்தா. இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த சமயத்தில் குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலை கொடுத்த பின்பும் அவரிடம் அதிக அளவு தாய்ப்பால் இருந்துள்ளது. செவிலியர்களின் வேண்டுகோளை அடுத்து தாய்ப்பாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்க செல்வபிருந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பும் குழந்தையின் தேவையைவிட அதிகமாக பால் சுரப்பதை உணர்ந்த செல்வபிருந்தா, அதனை தானமாக வழங்க முடிவு எடுத்துள்ளார். அப்போது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் செல்வபிருந்தா தாய்ப்பாலை தானமாக கொடுக்க தொடங்கியுள்ளார். இப்படி 22 மாதங்கள் தொடர்ந்து 300 லிட்டர் தாய்ப்பாலை செல்வபிருந்தா தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் தாய்ப்பாலுக்காக தவித்த எண்ணற்ற குழந்தைகளின் பசியை செல்வபிருந்தா போக்கியுள்ளார்.