Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் வேகமான தொழில்துறை வளர்ச்சி காரணமாக மிகப்பெரிய கப்பல்களை கையாளும் வகையில் ரூ.8000 கோடியில் வெளித்துறைமுகத் திட்டம்: சென்னை துறைமுக அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் வேகமான தொழில்துறை வளர்ச்சி காரணமாக உலகளவில் மிகப்பெரிய கப்பல்களை கையாளும் வகையில் ரூ.8000 கோடி மதிப்பீட்டில் வெளித்துறைமுகத் திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை துறைமுகத்தின், நீண்டநாள் நிலுவையில் இருந்த வெளித்துறைமுக திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சுமார் ரூ.8,000 கோடி முதலீட்டில் உருவாகவிருக்கும் இந்தப் பெரும்திட்டம், துறைமுகத்தின் சரக்கு கையாளும் கொள்ளளவை பெரிதும் உயர்த்துவதோடு, போக்குவரத்து நேரத்தையும் செலவையும் குறைக்க உதவும். இந்த வெளித்துறைமுகம் கடல்புறமாக, தற்போதைய துறைமுக வரம்பிற்கு அப்பால் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 20 மீட்டர் ஆழமுள்ள துறைமுகத்துடன், 20,000 (20 அடி நீளமுள்ள கப்பல் கொள்கலன்) அளவிலான சரக்கு அலகு கொள்ளளவுள்ள மிகப்பெரிய கப்பல்களை கையாளும் வசதிகள் இத்திட்டம் மூலம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து துறைமுக ஆணையத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய சரக்கு மையமாக மாறும். அதிவேக சரக்கு கையாளும் தொழில்நுட்பம் மற்றும் ஆழமான நீர்மட்டத்துடன் உலக தரத்திலான துறைமுக வசதிகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்திற்காக பரிவர்த்தனை ஆலோசகரை துறைமுகம் விரைவில் நியமிக்க உள்ளது.

திட்டத்தின் சாத்திய கூறுஆய்வறிக்கை முடிந்தவுடன், 2026ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு 45 ஆண்டுகள் கால ஒப்பந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வெளித் துறைமுகம் பல கட்டங்களாக உருவாக்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டம் 2031ம் ஆண்டுக்குள் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க கட்டத்தில் 18 மீட்டர் ஆழமுள்ள கப்பல்களை கையாளும் வசதி ஏற்படுத்தப்படும்.

அதைத்தொடர்ந்து அடுத்த கட்டங்களில் 21 மீட்டர் ஆழமுள்ள கப்பல்களையும் கையாளும் வகையில் துறைமுகம் மேம்படுத்தப்படும். முன்மொழிவு கோரிக்கை ஆவணத்தின் படி, திட்டத்தில் அலை தடுப்பு அமைப்பு, மண் நிரப்பல் மூலம் துறைமுக நிலப்பரப்பு உருவாக்கம், துறைமுக கட்டிடம், கண்டெய்னர் நிறுத்தம், சாலை மற்றும் ரயில் இணைப்பு, சரக்கு கையாளும் உபகரணங்கள் நிறுவல், துறைமுக ஆழம் அதிகரித்தல் மற்றும் வழிநடத்தும் உபகரணங்கள் போன்ற பல அடிப்படை பணிகள் உள்ளடக்கிய திட்டம் உருவாக்கப்படுகிறது.

இந்த திட்டமானது கடந்த சில ஆண்டுகளாகவே பலமுறை முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்த முடியாமல் போயிருந்தது. கடந்த 2007ம் ஆண்டு பாரதி துறைமுகத்தின் வடபுறத்தில் 2 கிலோமீட்டர் நீளமுள்ள துறைமுனையுடன், வருடத்திற்கு 4 மில்லியன் சரக்குகளை கையாளக்கூடிய “மெகா கண்டெய்னர் டெர்மின்’’ அமைக்கும் வகையில் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. அதனை தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்ப ஆய்வையும் மேற்கொண்டது. ஆனால், டெண்டர் அறிவிக்கப்பட்டபோது முதலீட்டாளர்களிடமிருந்து பெரிய பதில் கிடைக்கவில்லை என்பதால் கிடப்பில் போடப்பட்டது.

அதனை தொடர்ந்து 2013ம் ஆண்டிலும் மீண்டும் முயற்சி செய்யப்பட்ட போதும் பெரியளவில் கைகொடுக்காததால் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது, தமிழகத்தின் வேகமான தொழில்துறை வளர்ச்சி, பரந்த அளவிலான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் காரணமாகவும், தென் இந்தியாவின் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளித்துறைமுகத் திட்டம் உருவாகும் காலத்திற்குள் சென்னை துறைமுகம் - மதுரவயல் உயர்மட்டச் சாலைத் திட்டமும் வேகமாக முடிக்கு வரும்.

இந்தச் சாலை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சரக்கு வாகனங்கள் துறைமுகத்துக்குள் விரைவாகச் செல்லும் வசதி ஏற்படுகிறது. அதேபோல் வெளித் துறைமுகத் திட்டமும், மதுரவயல் உயர்மட்டச் சாலையும் ஒரே நேரத்தில் உருவாகி வருவதால், சென்னை தென்னிந்தியாவின் முக்கியமான சரக்கு நுழைவாயிலாக மாறும். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் மேலும் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார். பலமுறை கிடப்பில் போடப்பட்ட வெளித்துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னை துறைமுகம் இந்தியாவின் மிக நவீன கடல்சார் மையங்களில் ஒன்றாக உருவாகும். எனவே இத்திட்டம் நடைமுறைப்பட அனைத்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய சரக்கு மையமாக மாறும்.

* 2026ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

* தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு 45 ஆண்டு கால ஒப்பந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

n வெளித் துறைமுகத்தின் முதற்கட்டம் 2031ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்.

n 21 மீட்டர் ஆழமுள்ள கப்பல்களையும் கையாளும் வகையில் துறைமுகம் மேம்படுத்தப்படும்.