தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி குறித்து பலமுறை தெளிவாக அறிக்கை வெளியிட்டும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை: எடப்பாடிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி
சென்னை: தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கை: தொழில்துறையில் தமிழ்நாட்டை உயர்வான நிலைக்கு முதல்வர் கொண்டு வந்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலுடன் அறிக்கை விடும் எதிர்க்கட்சித் தலைவரின் அறியாமையைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.
முதல்வர் இதற்கு முன் பயணித்த ஐக்கிய அரபு நாடுகளில் 6 ஒப்பந்தங்கள், 6100 கோடி முதலீடு, சிங்கப்பூர் 1 ஒப்பந்தம், 312 கோடி முதலீடு, ஜப்பான் 7 ஒப்பந்தங்கள், 1030 கோடி முதலீடு, ஸ்பெய்ன் 3 ஒப்பந்தங்கள் 3440 கோடி முதலீடு, அமெரிக்கா 19 ஒப்பந்தங்கள் ரூ.7616 கோடி முதலீடு எனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த 36 ஒப்பந்தங்களில் Yield Engineering Services, Infinix Services, Rockwell Automation உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையை எட்டிவிட்டன. 11 நிறுவனங்களின் நில எடுப்பு-கட்டுமானப்பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி குறித்து தெளிவாகப் பல முறை அறிக்கை வெளியிட்டும் அதைப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லை. நான் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற முறையில் ஒரு வெள்ளைத் தாளை வீணடிக்க விரும்பவில்லை என்பதை, இனி பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்று சொல்லி விட்டு மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் வெள்ளைக்கொடி வேந்தருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.