Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தொழில் வளர்ச்சி

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் சார்பில் “உலக புத்தொழில் மாநாடு-2025” கோவையில் நடந்து முடிந்துள்ளது. இம்மாநாட்டில், 39 நாடுகளை சேர்ந்த, 264 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். விண்வெளி தொழில்நுட்பம், காலநிலை மாற்ற மேலாண்மை, மின் வாகன தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புத்தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், பெரு நிறுவனங்கள், தொழில் வளர் காப்பகங்கள் என 750 அரங்குகளுடன் புத்தொழில் கண்காட்சியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் துவக்கி வைத்த கையோடு ஒரு புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது, புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்த ரூ.100 கோடியில் இணை உருவாக்க நிதியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இது, தங்களது சொந்த முயற்சியால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நடத்தும் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டினை தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு, புத்துயிர் ஊட்டி அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதன் ஒரு பகுதியாக இந்த உலக புத்தொழில் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டு வரை 2,032 ஆக மட்டுமே இருந்தது. இது, கடந்த 4 ஆண்டுகளில் 10,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 8,000க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு ஊக்கம் அளித்து வருகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் மேற்கண்ட புள்ளிவிவரம். இதில் சுமார் 49 சதவீத நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் நேற்று முன்தினம் பேசும்போது, புத்தொழில் நிறுவன வளர்ச்சியிலும் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என பெருமைப்பட கூறியுள்ளார். அடுத்ததாக, வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி, அதற்கான இலக்கை அடைய தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சென்னை, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, ஓசூர், சேலம், கடலூர், தஞ்சாவூர், கோவை, திருச்சி ஆகிய 10 நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

உலகின் முன்னணி ஸ்டார்ட்-அப் மையங்களுள் ஒன்றாக தமிழகத்தை நிலைநிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை, தமிழக நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவும், நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில், அதுவும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் உலக புத்தொழில் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டதற்கு தொழில்முனைவோர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகின் தலைசிறந்த புத்தொழில் சூழல் கொண்ட முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டினை கொண்டு வரவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணமாக இந்த புத்தொழில் மாநாடு நடந்து முடிந்துள்ளது.