சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 5வது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு ரூ.15,516 கோடி முதலீடு மற்றும் 17,613 வேலைவாய்ப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இவைகளெல்லாம், இவர்களின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் விவரங்கள்தான்.
இதைத் தவிர, உலக முதலீட்டாளர் மாநாடு 2024, ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அதன்மூலம் 14.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இவர்கள் கூறுவதை போல் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள், 922 ஒப்பந்தங்கள் யாருடன் போடப்பட்டது? 32.81 லட்சம் நபர்களுக்கு யார் வேலைவாய்ப்பு தந்தார்கள்?
இவற்றில் உண்மையாக நடைமுறைக்கு வந்த ஒப்பந்தங்கள், செயல்பாட்டிற்கு வந்த தொழிற்சாலைகள், உண்மையில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை என்ன என்று யாருக்கும் தெரியாது. இந்த விவரங்களை ஏன் முழுமையாக வலைதளத்தில் வெளியிடுவதில்லை. தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.