ஜகார்த்தா: இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவின் வடக்கு கெலபா காடிங் பகுதியின் கடற்படை வளாகத்தில் மசூதி ஒன்று உள்ளது. இதனருகே இஸ்லாமிய உயர்நிலை பள்ளியும் இயங்கி வருகிறது. நேற்று வௌ்ளிக்கிழமை என்பதால் மசூதியில் ஏராளமானோர் மதிய நேர தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதியின் ஒருபகுதியில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் மற்றும் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்பட 55 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு அருகிலிருந்த பள்ளியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 55 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து திரும்பிய நிலையில், 20 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் கூறுகையில், “பள்ளிவாசலில் ஒலி பெருக்கி அருகே குண்டு வெடித்ததாக தெரிகிறது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து பொம்மை கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

