மீனம்பாக்கம்: ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபிக்கு இந்தோனேஷிய நாட்டின் 3 ராணுவ விமானங்கள் சென்றுவிட்டு, பின்னர் அந்த விமானம் நேற்று மீண்டும் இந்தோனேஷியாவுக்குத் திரும்பி கொண்டிருந்தது. சென்னை வான்வெளியை நெருங்கியபோது, இந்தோனேஷிய ராணுவ விமானிகளுக்கு ஓய்வு தேவைப்பட்டது. இதுகுறித்து டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தலைமை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, சென்னையில் ஓய்வெடுக்க விமானத்தை தரையிறக்குவதற்கு அனுமதி கேட்டனர்.
இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிக்கும்படி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானப்படை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, சென்னை பழைய விமானநிலையத்தில் நேற்று இந்தோனேஷியாவின் 3 ராணுவ விமானம் தரையிறங்கியது. பின்னர் அந்த விமானங்கள் ‘ரிமோட் பே’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த விமானிகள் உள்பட வீரர்கள் ஓய்வெடுத்தனர். பின்னர், சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து மீண்டும் இன்று காலை இந்தோனேஷியாவின் 3 ராணுவ விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. இது வழக்கமானது தான் என்று விமானநிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.