புதுடெல்லி: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ரிக்டர் 6.0 அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 29 பேர் காயமடைந்த நிலையில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி பகுதியில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதுடன், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. குறிப்பாக, போசோ மாகாணத்தை உலுக்கிய இந்த நிலநடுக்கம், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வலுவாக உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 29 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக உடனடி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் அதிக நில அதிர்வுகளை கொண்ட பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.