இந்தோனேஷியா, தாய்லாந்தில் சென்யார் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கியது!!
ஜகார்த்தா : இந்தோனேஷியா, தாய்லாந்தில் சென்யார் புயல் எதிரொலியாக ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கி உள்ளது. வங்கக்கடலில் உருவான சென்சார் புயல் காரணமாக இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக இந்தோனேஷியாவில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 450ஐ நெருங்கியது. 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சென்யார் புயல் காரணமாக தாய்லாந்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. 12 மாகாணங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 36 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையால் ஏராளமான வீடுகளை நீர் சூழந்து காணப்படுகிறது. அந்நாட்டில் இதுவரை கனமழை வெள்ளத்திற்கு 170 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தோனேசியா, தாய்லாந்தில் சென்யார் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கி உள்ளது.

