இந்திரா, ராஜீவ் காந்தியுடன் பணியாற்றிய காங். தலைவர்கள் ராகுலால் சோர்வடைந்து விட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தெடியபாடா: இந்திரா, ராஜீவ்காந்தியுடன் பணியாற்றிய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தியால் சோர்வடைந்து விட்டனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஒருநாள் பயணமாக நேற்று சென்றார். அங்கு, பழங்குடியினர் சமூகத்தின் தெய்வமான பண்டோரி மாதா கோயிலில் வழிபாடு செய்த அவர், பழங்குடியின தலைவர் பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நர்மதா மாவட்டத்தின் தெடியபாடா நகரில் நடந்த ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில், ரூ.9700 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்துசூரத் சென்ற பிரதமர் மோடி அங்கு வசிக்கும் பீகார் மக்களை சந்தித்து அவர்களிடம் பேசுகையில், ‘‘கடந்த பத்தாண்டுகளில் சந்தித்த தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளில் இருந்து காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும். ‘முஸ்லிம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸ்’ கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்.
அது மட்டுமல்லாமல், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் பணியாற்றிய அந்தக் கட்சியில் உள்ள தேசிய தலைவர்கள், ராகுல் காந்தியின் சாகசங்களால் சோகமாக உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவற்றைக் குறை கூறுவதன் மூலம் அவர்கள் தோல்விக்கான காரணத்தை கூற எளிதான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். பீகாரில் தலித்கள் பெரும்பான்மையாக உள்ள 38 இடங்களில் 34 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. தலித்துகள் கூட காங்கிரசை நிராகரித்துவிட்டனர்’’ என்றார்.


