இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு முக்கிய ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு: ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
சென்னை: இண்டிகோ விமான சேவை பாதிப்பால் முக்கிய ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்துள்ளது. இந்த மாத தொடக்கத்திலிருந்து இண்டிகோ விமான நிறுவன விமானிகள், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் விமான பணி நேர விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக இந்திய ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, 37 உயர்தர ரயில்களில் 166 கூடுதல் பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 114க்கும் மேற்பட்ட பயணங்களில் சேவையை அதிகரித்து, தவறவிட்ட பயணிகளுக்கு உதவி வருகிறது. இந்த பெட்டிகள் பிரீமியம் ரயில்களான ராஜதானி, சதாப்தி மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஒரே நேரத்தில் பல ஆயிரம் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறனை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் 114க்கும் மேற்பட்ட தனித்தனி பயணங்களில் இந்த கூடுதல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். சாதாரண நாட்களில் இருக்கும் இடங்களை விட கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் அதிக சீட்கள் இப்போது கிடைக்கின்றன.குறிப்பாக விமான சேவை பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து பிரீமியம் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், புனே, அகமதாபாத் போன்ற இடங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு மிக அதிக பாதிப்பு அடைந்த நகரம் என்பதால், அங்கிருந்து டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத் செல்லும் அனைத்து முக்கிய ரயில்களிலும் பெருமளவு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஐதராபாத்தில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை செல்லும் ரயில்களிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விமானத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்த பலர் இப்போது ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். திருமணம், விழாக்கள், விடுமுறைக்காக குடும்பத்துடன் பயணிப்பவர்கள் ரயில்வேயின் கூடுதல் வசதியால் பெரிதும் பயனடைகின்றனர். விமான டிக்கெட் ரத்து ஆனதால் ஏமாற்றமடைந்த பலருக்கு ரயில் ஒரு நல்ல மாற்று வழியாக அமைந்துள்ளது. கோயில், மசூதி, தேவாலயம் போன்ற புனித தலங்களுக்கு செல்லும் பயணிகளும் இந்த கூடுதல் சேவையால் பயனடைகின்றனர்.
இதுகுறித்து ரயில்வேயின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘விமான சேவை ரத்துகளால் ஏற்பட்ட சிரமத்தை குறைப்பதே எங்கள் முதல் நோக்கம். பயணிகளுக்கு நம்பகமான மற்றும் சரியான நேரத்தில் மாற்று வழிகளை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். விமான பயணத்திற்கு பதிலாக ரயில் பயணத்தை தேர்வு செய்ய பயணிகள் முன்வந்துள்ளனர். இது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. 24 மணி நேரத்திற்குள் 166 பெட்டிகளை 37 வெவ்வேறு ரயில்களில் சேர்ப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் பயணிகளின் அவசரத்தை புரிந்துகொண்டு எங்கள் குழுவினர் இரவு பகல் பாராமல் உழைத்தனர். பல்வேறு மண்டலங்களின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்தினர்” என்றார்.
கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்ட உடனேயே ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய எண்ணிக்கை பதிவானது. பல முக்கிய வழித்தடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன. காத்திருப்பு பட்டியலும் நீண்டு கொண்டே போனது. இது எவ்வளவு பெரிய தேவை இருக்கிறது என்பதை காட்டுகிறது. விமான டிக்கெட் ரத்து சான்றிதழ் காட்டினால் சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. விமான பயணிகள் பலர் திடீரென்று ரயில் நிலையங்களுக்கு வருவதால், பெரிய நகரங்களில் முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ரயில் நிலையங்களில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு கூடுதல் ஆர்பிஎப் மற்றும் ஆர்பிஎஸ்எப் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடி தொடர்ந்தால் மேலும் கூடுதல் பெட்டிகளை சேர்க்க ரயில்வே தயாராக உள்ளது. சிறப்பு ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பு குறையும் வரை இந்த கூடுதல் வசதி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கோவை, நாகர்கோவில், பெங்களூருக்கு சிறப்பு ரயில்
இண்டிகோ விமான நிறுவனம் விமானங்களை ரத்து செய்ததால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று வழி அளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குவதுடன், ஏற்கனவே இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளையும் சேர்த்துள்ளது. அதன்படி, நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (ரயில் எண். 06012) நாகர்கோவிலில் இருந்து இன்று இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் சேரும். மறுமார்க்கத்தில் (ரயில் எண். 06011) தாம்பரத்தில் இருந்து நாளை மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சேரும்.இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருவனந்தபுரம் நார்த் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (ரயில் எண். 06108) திருவனந்தபுரம் நார்த்தில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் சேரும். மறுமார்க்கத்தில் (ரயில் எண். 06107) சென்னை எழும்பூரில் இருந்து நாளை மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் நார்த் சேரும்.இந்த ரயில் கொல்லம், செங்கன்னூர், திருவள்ளா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (ரயில் எண். 06024) கோவையில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சேரும்.
மறுமார்க்கமாக (ரயில் எண். 06023) சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.30 மணிக்கு கோவை சேரும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பெங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள் ரயில் (எண். 06255) பெங்களூருவில் இருந்து இன்று காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு சென்னை எழும்பூர் சேரும். மறுமார்க்கமாக மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு பெங்களூரு சேரும். இந்த ரயில் யஸ்வந்தபூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இதே போல் ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன.


