சென்னை : சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது. இதனையடுத்து அவசர அவசரமாக சென்னையிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து நேற்றிரவு 5 ஊழியர்கள் மற்றும் 160 பயணிகளுடன் பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது.
இதையடுத்து விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். இதை தொடர்ந்து, விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான பொறியாளர்கள் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பழுதை உடனடியாக சரி செய்ய முடியாததால், பயணிகள் 160 பேரும் மாற்று விமானம் மூலமாக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் சரியான நேரத்திற்கு தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.