Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு: இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விசாரிக்க 4 அதிகாரிகள் அடங்கிய உயர் மட்ட குழு: சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விமான பணி நேர கட்டுப்பாடு விதிகளால், நாடு முழுவதும் இண்டிகோவின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, மங்களூரு, சென்னை,ஐதராபாத், கொல்கத்தா போன்ற முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பல விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்துகிடக்கின்றனர்.

இரவு நேரத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பயணிகள் காத்துக்கிடக்கின்றனர். விமானங்கள் ரத்தானதால் லக்கேஜ்களுடன் பயணிகள் குவிந்துள்ளதால் விமான நிலையங்கள் ரயில் நிலையங்களை போல் கூட்ட நெரிசலுடன் காணப்படுகின்றன. இண்டிகோ நிறுவனம் விமானங்களை ரத்து செய்துள்ளதால் இதர விமான நிறுவனங்கள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது பயணிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான்காவது நாளாக நேற்றும் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு மாற்று வழியின்றி குழப்பத்தில் தவித்தனர்.

இண்டிகோவின் இந்த குளறுபடிகளால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இண்டிகோவின் விமான சேவைகள் பாதிப்பு குறித்து விசாரிக்க 4 அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை (டிஜிசிஏ) அமைத்துள்ளது. இந்த குழுவில் விமான போக்குவரத்து துறை இணை இயக்குனர் ஜெனரல் சஞ்சய் பிரம்மானே, துணை இயக்குனர் ஜெனரல் அமித் குப்தா, விமான செயல்பாட்டு பிரிவு மூத்த ஆய்வாளர் கேப்டன் கபில் மங்களிக், விமான செயல்பாட்டு பிரிவு ஆய்வாளர் கேப்டன் ராம்பால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேவையான ஒழுங்குமுறை அமலாக்க நடவடிக்கைகளை செயல்படுத்தவும் நிறுவன வலுப்படுத்தலை உறுதி செய்யவும் குழு தனது பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் டிஜிசிஏவிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகள் சங்கம் கண்டனம்

தொடர்ந்து இடையூறுகளை சந்தித்து வரும் இண்டிகோவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், விமான பணி நேர கட்டுப்பாடு விதிகளில் இருந்து அந்த நிறுவனத்துக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் (ஆல்பா-இந்தியா) கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிஜிசிஏவிற்கு எழுதிய கடிதத்தில், , இந்த முடிவு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் கொள்கை மற்றும் நோக்கத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

* அரசின் ஏகபோக அதிகாரமே இண்டிகோ தோல்விக்கு காரணம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்த அரசின் ஏகபோக அதிகாரமே இண்டிகோ நிறுவனத்தின் படுதோல்விக்கு காரணமாகும். விமானங்களின் தாமதங்கள், ரத்து செய்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுவது சாதாரண இந்திய மக்கள் தான். இந்தியா ஒவ்வொரு துறையிலும் நியாயமான போட்டிக்கு தகுதியானது. மேட்ச் பிக்சிங் ஏகபோகங்களுக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கட்டுரையை ராகுல்காந்தி பகிர்ந்து கொண்டார். அதில் , ‘‘உங்கள் இந்தியாவை தேர்வு செய்க. நாடக கண்காட்சியா அல்லது ஏகபோகமா? வேலைகள் அல்லது தன்னலக்குழுக்களா? திறமையா? அல்லது இணைப்புக்களா? புதுமையா? அல்லது மிரட்டலா? பலருக்கா? அல்லது சிலருக்கா செல்வம்? வணிகத்திற்கான புதிய ஒப்பந்தம் ஏன் வெறும் விருப்பமில்லை என்பதை நான் எழுதுகிறேன். அது இந்தியாவின் எதிர்காலமாகும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

* 1000 விமானங்கள் ரத்து

இதனிடையே, இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நாளை(இன்று) 1000க்கும் குறைவான விமானங்கள் ரத்து செய்யப்படும். வரும் 10 அல்லது 15ம் தேதிக்குள் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.