Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்தியாவின் துணை இன்றியமையாதது அமெரிக்கா தனியாக சமாளிக்க முடியாது: முன்னாள் ஆலோசகர் கருத்து டிரம்ப் பதிலடி

வாஷிங்டன்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு இந்தியாவின் துணை இன்றியமையாதது என முன்னாள் ஆலோசகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரப் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரம் உலக வர்த்தகத்தை நிலைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாக மோடி மற்றும் ஜி ஜின்பிங் அங்கீகரித்தனர்.

அதேபோல், இந்தியா-ரஷ்யா உறவின் வலிமையை புடினுடனான சந்திப்பில் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிய மேரி கிஸ்ஸல், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘கம்யூனிஸ்ட் சீனாவை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நாம் கருதினால், நமக்கு இந்தியா தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிய-பசிபிக் பகுதியில் நம்மால் தனியாகப் போராட முடியாது. ஷாங்காய் உச்சி மாநாட்டில் இந்தியா காட்டிய ஈடுபாடு, சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதில் டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் சவாலை எடுத்துக்காட்டுகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நட்பு நாடுகளின் பலம் மட்டும் போதாது; இந்தியாவின் வலிமையும் நமக்குத் தேவை’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் பதற்றம் நிலவும் சூழலிலும், சீனாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியாவுடன் வலுவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவரது கருத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதற்கிடையே அலபாமாவில் உள்ள ஹன்ட்ஸ்வில் நகரில் அமெரிக்க விண்வெளிப் படைத் தலைமையகத்தை மாற்றும் நிகழ்வில் பேசிய அதிபர் டிரம்ப், ‘வர்த்தகத்தை காரணமாக காட்டி, ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். வர்த்தக ஒப்பந்தங்கள் பலவும் வரி விதிப்புகள் காரணமாகவே சாத்தியமானது. இந்தியாவுடன் அமெரிக்கா நல்ல உறவில்தான் உள்ளது.

ஆனால் பல ஆண்டுகளாக இந்த வர்த்தக உறவு ஒருதலைப்பட்சமானதாகவே இருந்து வருகிறது. உலகின் மிக அதிகமான வரிகளை இந்தியா எங்கள் மீது விதித்தது. உதாரணமாக, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மீது 200% வரை வரி விதிக்கப்பட்டதால், அந்த நிறுவனத்தால் இந்தியாவில் பைக்குகளை விற்க முடியவில்லை. எனவே எனது வரி விதிப்புக் கொள்கைகள் மிகவும் பாராட்டக் கூடியவை. வரிகளே போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஆயுதம். அதுவே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மிகப்பெரிய திறனை வழங்குகிறது’ என்று அவர் குறிப்பிட்டார்.