லக்கி பாஸ்கர் படப்பாணியில் இந்திய பங்கு சந்தைகளில் ரூ.36,500 கோடி சுருட்டல்: கையும் களவுமாக சிக்கிய அமெரிக்க வர்த்தக நிறுவனம்
சாதாரண வங்கி ஊழியர் பங்குச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்குகளை அதிக விலைக்கு வாங்கி, அதன் விலையை ஏற்றிய பிறகு, திடீரென ஒட்டுமொத்தமாக அத்தனை பங்குகளையும் விற்று பெரும் பணம் சம்பாதித்து, மோசடி செய்து அமெரிக்கா தப்பிச்செல்லும் கதையை விளக்கும் படம் லக்கி பாஸ்கர். பங்குச்சந்தை மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தா பாணியில் அமைந்த இந்த மோசடி படத்தை போல் இந்தியாவில் அமெரிக்க நிறுவனம் ஒன்று மெகா மோசடி செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளது.
அதன் விவரம்: அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் உலக அளவில் வர்த்தம் செய்து வருகிறது. குறிப்பாக உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளில் பெரும் முதலீடு செய்துள்ளது. அதே போல் இந்திய சந்தைகளிலும் முதலீடு செய்து, இந்திய முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.36,500 கோடி சம்பாதித்துள்ளது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ரூ.4844 கோடியை செபி முடக்கி வைத்துள்ளது.
* ஆப்ஷன்ஸ் வர்த்தகம்
அமெரிக்காவின் ஜேன் ஸ்ட்ரீட் குழுமம் உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக இல்லாவிட்டாலும் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்திய பங்குச்சந்தையிலும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ஏராளமான முதலீடு செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான கால கட்டத்தில் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் மட்டும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ரூ. 36,671 கோடி (5 பில்லியன் டாலர்கள்) வருவாய் ஈட்டியுள்ளது. இதில், ரூ.4,843 கோடி சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளது. குறிப்பாக 2023 ஜனவரி முதல் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை வெவ்வேறான மாறுபட்ட 21 வேலை நாட்களில் நிப்டி மற்றும் பேங்க் நிப்டியில் ஜேன் ஸ்ட்ரீட் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேடுகள் மூலம் இந்திய பங்கு விலைகளை உயர்த்தியும், குறைத்தும் வந்துள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து பெருமளவு லாபத்தை ஈட்டியுள்ளது. அதே நேரத்தில் லாபத்தை எதிர்பார்த்து பங்குச்சந்தையில் முதலீடு செய்த இந்தியாவில் உள்ள சிறு,குறு முதலீட்டாளர்களை வேண்டுமென்றே இழப்புக்கு தள்ளி உள்ளது. இதை செபி உறுதிப்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்துதான் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய ரூ.4,844 கோடியை முடக்கி உள்ளது செபி.
* மோசடி நடந்தது எப்படி?
ஸ்டாக் ரிக்கிங் என்று சொல்லப்படக்கூடிய, காலையில் அதிகளவிலான பங்குகளை வாங்கி அவற்றுக்கு அதிக மதிப்பு இருப்பது போல் காட்டிவிட்டு, அடுத்த நாள் அதை விற்றுவிட்டு அதிக முதலீடு பார்த்ததால், ஜேன் ஸ்ட்ரீட் கையும் களவுமாக சிக்கியுள்ளது. இது ஆப்ஷனல் வர்த்தகர்களை மட்டுமின்றி மொத்த பங்குச் சந்தையையும் கடுமையாகப் பாதிக்கும். ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு இண்டெக்ஸ் ஆப்ஷன் மூலம் ரூ.44,358 கோடி லாபமும் பங்குகளில் ரூ.7,208 கோடி மற்றும் இண்டெக்ஸில் ரூ.191 கோடி இழப்பும், ரூ.288 கோடி பண இழப்பும் ஏற்பட்டுள்ளது. நிகர லாபமாக ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு ரூ. 36,671 கோடி லாபம் கிடைத்துள்ளது.
மேலும் சட்டவிரோதமாக ரூ.4,843 கோடி கிடைத்திருக்கிறது. இந்த முறைகேட்டை தொடர்ந்து ஜேஎஸ் முதலீடுகள், ஜேஎஸ் 12 முதலீடுகள் பிரைவேட் லிமிடெட், ஜேன் ஸ்ட்ரீட் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட், ஜேன் ஸ்ட்ரீட் ஆசியா டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகளை வாங்க, விற்கத் தடைவிதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
* பணக்காரர்களை மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பங்குச் சந்தை எப் அண்ட் ஓ வர்த்தகத்தை பெரு நிறுவனங்களின் விளையாட்டு ஆக மாறிவிட்டது என்றும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் 2024ஆம் ஆண்டிலேயே நான் தெளிவாகச் சொன்னேன். அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ஆயிரக்கணக்கான கோடிகளை மோசடி செய்துள்ளதாக தற்போது செபி அமைப்பே ஒப்புக்கொள்கிறது. இவ்வளவு காலமாக செபி ஏன் அமைதியாக இருந்தது?
யாருடைய உத்தரவுக்கு கட்டுப்பட்டு மோடி அரசு கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தது? இன்னும் எத்தனை பெரிய சுறாக்கள், சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன? மோடி அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குகிறது என்பதும், சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது என்பதும் ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாகத் தெரிகிறது’ என தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு தான் வெளியிட்ட இது தொடர்பான எக்ஸ் பதிவையும் தற்போது அவர் இணைத்துள்ளார். அந்தப் பதிவில், ‘கட்டுப்பாடற்ற எஃப் அண்ட் ஓ வர்த்தகம் 5 ஆண்டுகளில் 45 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. 90 சதவீத சிறு முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இவ்வளவு பெரிய பாதகத்தைச் செய்யும் பெரு முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களை செபி வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்து உள்ளார்.
* பங்குச்சந்தை மீதான பயத்தை ராகுல் பரப்புகிறார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்குச் சந்தை குறித்து அச்சத்தையும், தவறான தகவல்களையும் பரப்புவதாக பாஜ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக பாஜ ஐடி துறைத் தலைவர் அமித் மாளவியா கூறுகையில்,’ ராகுல் காந்தி பரபரப்பாக்கமுயற்சிக்கும் ஒரு உலகளாவிய நிறுவனத்தை செபி தடை செய்ததன் நடவடிக்கையே, சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வலுவான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதற்கான தெளிவான சான்றாகும். ராகுல்காந்தி கூறுவது போல் செபி அமைதியாக இருந்தால், எந்த விசாரணையும் இருக்காது, தடையும் இருக்காது, தலைப்புச் செய்தியும் இருக்காது; அவரது முழு குற்றச்சாட்டும் அங்கேயே சரிந்து விடுகிறது ராகுல்காந்தி இந்திய பங்குச் சந்தை பற்றிய பயத்தையும் தவறான தகவல்களையும் பரப்புகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
* பங்குச்சந்தை எப் அண்ட் ஓ வர்த்தகம் என்றால் என்ன
பங்குச் சந்தைகளில் பங்குகளை வைத்திருப்பவர்களிடம், ஒரு குறிப்பிட்ட எதிர்கால தேதிக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் அந்த பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொள்வதே ‘எப் அண்ட் ஓ’ (Futures and Options) சந்தை ஊக வணிகமாகும். அந்தக் குறிப்பிட்ட தேதியில், அந்த குறிப்பிட்ட பங்கின் விலை குறைந்தாலும், ஏறினாலும் அதை வாங்குபவரே அதற்குப் பொறுப்பு.
குறைந்த முதலீட்டில் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து, பெரு முதலீட்டாளர்கள் அவற்றை ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு, அதாவது அவர்கள் வாங்கிய தொகையை விட குறைந்த தொகைக்கு வாங்குவது அதிகமாக நடக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவதற்கும், பின்னர் அவை அதிகரிப்பதற்கும் அவர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.