புதுடெல்லி: 2026ம் ஆண்டில் ஹஜ் யாத்திரை செல்வதற்கு இந்தியாவிற்கான ஒதுக்கீடு 1,75,025 என்ற ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு இந்தியா, சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கடந்த 7ம் தேதி சவுதி அரேபியாவில் அரசு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெட்டாவில் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் பின் பவ்சான் அல் ராபியாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு அமைச்சர்களும் தற்போதைய ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்தனர்.
சமூகமான மற்றும் வசதியான புனித யாத்திரையை உறுதி செய்வதற்கான வசதிகள், போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். தொடர்ந்து 2026ம் ஆண்டு இந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கை ஒதுக்கீடு குறித்து அமைச்சர்கள் இருவரும் ஆலோசித்தனர். பின்னர் 2026ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் யாத்திரை செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது குறித்த ஒப்பந்தத்தில் இரு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

