துபாய்: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியினர் கோப்பையை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சர் கைகளால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள், இறுதியில் கோப்பையை பெறாமலே வெறும் கைகளில் வெற்றியை கொண்டாடினர். ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணி வெற்றி பெற்றதும் ஆட்டநாயகன் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு ரன்னர்-அப் 2-வது பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னர், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டது. போட்டி முடிந்ததும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தாமதமானது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். இருப்பினும், நக்வி இரண்டாம் இடம்பிடித்தவர்களுக்கான காசோலையை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது. விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும் என்றும் பி.சி.சி.ஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.