மும்பை: ஐபிஎல், உள்ளூர் கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இருந்து இந்திய வீரர் மோஹித் ஷர்மா ஓய்வை அறிவித்தார். 2013ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக வலம் வந்தார். குறிப்பாக 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரை சென்றதில் இவரது பங்கு மிக முக்கியமானது. அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து, பர்ப்பிள் கேப் வென்ற மோகித் சர்மா, பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு குறித்துத் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டுள்ள மோகித் சர்மா; இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். ஹரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்தப் பயணம் எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம்" தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

