சமூக வலைதளம் மூலம் கசிந்த தகவல்; இந்திய ராணுவ ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு விற்பனை: ராஜஸ்தான் நபர் அதிரடி கைது
ஜெய்ப்பூர்: இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு அனுப்பியதாக 47 வயது நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மார், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஹனிப் கான் (47) என்பவரை ராஜஸ்தான் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை (நுண்ணறிவு) பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
ஜெய்சல்மாரின் பசன்பீர் ஜூனி பகுதியைச் சேர்ந்த இவர், பணத்திற்காக இந்திய ராணுவத்தின் முக்கிய தளங்கள் மற்றும் வீரர்களின் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறை ஐ.ஜி. டாக்டர் விஷ்ணுகாந்த், ‘மாநிலத்தில் நடக்கும் உளவுச் செயல்களுக்கு எதிராக நாங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே, ஹனிப் கானின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறினார். விசாரணையில், ஹனிப் கான் சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் நிரந்தரத் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர் மீது அரசு ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.