ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 29ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் ஜஸ்டின்(56), மோபின்(20), சைமன்(53), சேகர்(30), டெனிசன்(36) ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. சமீபத்தில் நீதிமன்றம் மீனவர்களுக்கு கடும் அபராதம் தொகை விதித்து நிபந்தனையுடன் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதில் ஜஸ்டின் இரண்டாவது முறையாக பிடிபட்டதால், கடும் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். மீதமுள்ள 4 பேரில் மோபினுக்கு ரூ.79,500, டெனிசன், சேகர், சைமன் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.16,500 அபராதம் விதிக்கப்பட்டது.
4 பேரும் அபராதத்தை செலுத்தி விடுதலையாகினர். ஆனால், அபராத தொகையை செலுத்திய பின்னரும், 4 மீனவர்களும் மீண்டும் கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் அலட்சியத்தால், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டவில்லை. இதனால், அபராதம் செலுத்தி விடுதலையான மீனவர்களை உடனே தமிழகம் அனுப்புவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்.