புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி 6 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இதனை தொடர்ந்து அமீர் கான் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் நேற்று சந்தித்தார். இரு நாட்டு அமைச்சர்களும் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், எல்லைத் தாண்டிய தீவிரவாதம் இரு நாடுகளுக்குமான பொதுவான அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் ஒருங்கிணைக்க வேண்டும்.
காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்ப தூதுக்குழுவானது தூதரக நிலைக்கு மேம்படுத்துப்படுகின்றது” என்றார். தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான், இந்தியாவின் நலன்களுக்கு எதிராக தனது நாட்டை பயன்படுத்த ஆப்கானிஸ்தான் எந்த கூறுகளையும் அனுமதிக்காது” என்றார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்தியா தனது அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இந்தியா தனது தொழில்நுட்ப தூதுக்குழுவை நியமித்தது.