டெல்லி: 2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. ஏற்கெனவே 6.3%ஆக இருக்கும் என கணித்திருந்த உலக வங்கி தற்போது 6.5%ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது. 2026-27ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.3%ஆக குறையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன், டி.சி.-யில் அமைந்துள்ள உலக வங்கி உலகநாடுகளில் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது.
அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு மற்றும் உலகநாடுகளிடையேயான ஏற்பட்டுள்ள போர் பதற்றம் போன்ற காரணங்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது உலக வங்கி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
அதன்படி, 2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. விவசாய உற்பத்தி, வலுவான நுகர்வோர் வளர்ச்சி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் 2026-27ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.3%ஆக குறையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.