இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த மாதிரியான தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம்: ராகுல்காந்தி உறுதி
டெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த மாதிரியான தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம் என அரசியலமைப்புச் சட்ட நாளையொட்டி ராகுல்காந்தி உறுதி மொழி அளித்துள்ளார்.' இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் மட்டுமல்ல. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதி. ஒருவர் எந்த மதம், மொழி, மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சமத்துவம், மரியாதை, நீதி தரப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் எக்ஸ் தள பதிவில்; "இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு வெறும் புத்தகம் மட்டுமல்ல, இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட ஒரு புனிதமான வாக்குறுதி. ஒருவர் எந்த மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தப் பிராந்தியத்தில் இருந்து வந்தாலும், எந்த மொழி பேசினாலும், ஏழையாக இருந்தாலும் அல்லது பணக்காரராக இருந்தாலும், அவருக்குச் சமத்துவம், மரியாதை மற்றும் நீதி கிடைக்கும் என்ற வாக்குறுதி.
அரசியலமைப்புச் சட்டம் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக் கவசம், அவர்களின் வலிமை மற்றும் ஒவ்வொரு குடிமகனின் குரல் ஆகும். அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பாக இருக்கும் வரை, ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த விதமான தாக்குதலும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம். அதைப் பாதுகாப்பது எனது கடமை, அதன் மீது விழும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் முன்னால் நான் உறுதியாக நிற்பேன். உங்கள் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்ட நாள் நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.


