மும்பை: இந்திய சினிமாவின் பெரும் ஆக்ஷன் ஹீரோவாக ஹீமேன் என புகழப்படும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா நேற்று காலமானார். அவருக்கு வயது 89. கடந்த பல நாட்களாக மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்ட தர்மேந்திரா, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் இறந்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் வதந்தி பரவியது. இதை தர்மேந்திரா குடும்பத்தினர் மறுத்தனர். இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் குடும்பத்தார் வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டில் வைத்தே அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை தர்மேந்திரா உயிர் பிரிந்தது.
நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி ஆகிய தளங்களில் இயங்கிய தர்மேந்திராவுக்கு 1997ல் இந்தி படவுலகிற்கு ஆற்றிய பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவர் நடித்ததில் குறிப்பிடத்தக்க ஒரு படம், 1975ல் வெளியான ‘ஷோலே’. இதில் வீரு என்ற கேரக்டரில் கைதியாக நடித்து பிரபலமானார். ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் தொகுதியில் இருந்து பாஜ சார்பில் இந்தியாவின் 14வது மக்களவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2012ல் இந்தியாவின் 3வது மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
தர்மேந்திரா என்கிற தரம் சிங் தியோல், கடந்த 1935 டிசம்பர் 8ம் தேதி, பஞ்சாப் லூதியானா மாவட்டத்திலுள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன் சிங் தியோல், சத்வந்த் கவுர் தம்பதிக்கு மகனாக, பஞ்சாபி ஜாட் சீக்கியர் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமார் நடிப்பால் ஈர்க்கப்பட்டு சினிமாவில் நடிக்க மும்பை வந்தார் தர்மேந்திரா. பிலிம்பேரில் நடந்த நடிகர்களுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்று ஜெயித்தார். 1960ல் அர்ஜூன் ஹிங்கோரானியின் ‘தில் பீ தேரா ஹம் பீ தேரே’ என்ற படத்தில் அறிமுகமானார். 1961ல் ‘பாய் ஃப்ரண்ட்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 1960 மற்றும் 1967க்கு இடையில் காதல் கதை கொண்ட பல படங்களில் நடித்தார்.
‘ஆயி மிலன் கி பேலா’, ‘ஆயா சவான் ஜூம்கே’, ‘மேரே ஹம்தம் மேரே தோஸ்த்’, ‘பியார் ஹீ பியார்’, ‘ஜீவன் மிருத்யு’ போன்ற படங்களில் தர்மேந்திரா காதல் ததும்பும் வேடங்களில் நடித்தார். ‘ஷிகார்’, ‘பிளாக்மெயில்’, ‘கப் கியூன் அவுர் கஹான்’, ‘கீமத்’ போன்ற சஸ்பென்ஸ் திரில்லர் படங்களிலும் அவர் நடித்தார். 1971ல் வெற்றிபெற்ற ‘மேரா காவ்ன் மேரா தேஷ்’ என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்து, சிறந்த நடிகர் விருதுக்கான பரிந்துரையை பெற்றார். மென்மையான மற்றும் அதிரடி ஹீரோவாக நடித்து வந்த தர்மேந்திரா, 1975ல் பன்முகத்திறமை கொண்ட நடிகராக அழைக்கப்பட்டார்.
அவரது வெற்றிகரமான ஜோடியாக ஹேமமாலினி இருந்தார். பிறகு அவரே காதல் மனைவியாகவும் மாறினார். 2005ல், 50வது ஆண்டுக்கான ஆங்கில பத்திரிகை ஒன்றின் விருதுகளை தேர்வு செய்த நீதிபதிகள், ‘ஷோலே’ படத்துக்கு 50 ஆண்டு கால சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கி சிறப்பித்தனர். அதேபோல் ‘யாதோன் கி பாராத்’ படம் தர்மேந்திராவின் சினிமா வாழ்க்கையில் தனி மகுடம் போல் ஜொலித்தது. அதேபோல் மீனா குமாரியுடன் அவர் நடித்த ‘பூஹ்ல் அவுர் பத்தர்’ படம் பொன் விழா கொண்டாடி தர்மேந்திராவுக்கு ஆக்ஷன் இமேஜை பெற்றுத் தந்தது.
1976 முதல் 1984 வரையிலான காலக்கட்டத்தில் நட்சத்திர முக்கியத்துவம் கொண்ட ஏராளமான படங்களில் நடித்த தர்மேந்திரா, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர், ரசிகைகளை பெற்றார். ‘தரம் வீர்’, ‘சரஸ்’, ‘ஆசாத்’, ஃகாத்திலோன் கே ஃகாத்தில்’, ‘கசப்’, ‘ராஜ்புத்’, ‘பகவத்’, ‘ஜானி தோஸ்த்’, ‘தர்ம் கானூன்’, ‘மெயின் இன்தெக்வாம் லூங்கா’, ‘ஜீனே நஹி தூங்கா’, ‘ஹுகுமாத்’ உள்பட பல அதிரடி படங்களில் தர்மேந்திரா நடித்தார். அதன் மூலம் ஹீமேன் என போற்றப்பட்டார்.
பாஜக சார்பில் 2004 முதல் 2009 வரை ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். தர்மேந்திராவின் முதல் திருமணம் 1954ல், அவரது 19வது வயதில் பிரகாஷ் கவுர் என்பவருடன் நடந்தது. அவரது முதல் திருமணத்தின் மூலமாக சன்னி தியோல், பாபி தியோல் ஆகிய 2 மகன்கள் பிறந்தனர். தற்போது அவர்கள் வெற்றிகரமான நடிகர்களாக புகழ்பெற்றுள்ளனர். மேலும் விஜீதா, அஜீதா ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் யாரும் சினிமாவில் நடித்ததில்லை.
மும்பைக்கு சென்று திரைத்தொழிலில் ஈடுபட்ட பிறகு முதல் மனைவி பிரகாஷ் கவுர் தனக்கு விவாகரத்து அளிக்காததால் 2வது திருமணம் செய்துகொள்ள இஸ்லாத்திற்கு மாறி ஹேமமாலினியை திருமணம் செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. தர்மேந்திரா, ஹேமமாலினி தம்பதிக்கு அஹானா தியோல், ஈஷா தியோல் ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் ஈஷா தியோல் நடிகை ஆவார். இவர் தமிழில் சூர்யா ஜோடியாக ஆய்த எழுத்து படத்தில் நடித்தார். தர்மேந்திரா மறைவுக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான் கான், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ஹிரித்திக் ரோஷன், விஷால் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* சென்னையில் ஒரு வருடம் ஓடிய அந்த 2 படங்கள்
இந்தி சினிமாவை பற்றி 1970,80 கால தமிழ் ரசிகர்களிடம் கேட்டால் அவர்கள் உச்சரிக்கும் பெயர் இரண்டுதான். ஒன்று தர்மேந்திரா, மற்றொன்று அமிதாப் பச்சன். காரணம், இவர்கள் இணைந்து நடித்த ‘ஷோலே’ என்ற சாதனை படம். இந்த படம் சென்னையில் மட்டுமே ஒரு வருடம் ஓடியது. அதேபோல் தர்மேந்திரா நடித்த ‘யாதோன் கி பாராத்’ படமும் சென்னையில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.



