கட்ச்: குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அருகே கோரி க்ரீக் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் ஊடுருவியதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 68வது பட்டாலியனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், பிஎஸ்எஃப் மற்றும் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். லக்கி நாலா ஜெட்டியில் இருந்து பிரஹார் கப்பலில் புறப்பட்ட குழு, மூன்று விரைவு ரோந்துப் படகுகளின் உதவியுடன் கோரி க்ரீக் பகுதியை முற்றுகையிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது, இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 பாகிஸ்தான் மீனவர்களைப் இந்திய வீரர்கள் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவால் மாவட்டத்தைச் சேர்ந்த 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு, சுமார் 60 கிலோ மீன்கள் மற்றும் ஒன்பது பெரிய மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.