சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை முடிவடைந்த முதல் நிதி காலாண்டின் செயல்பாடுகள் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் பினோத் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: உலக அளவில் வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்தியன் வங்கியின் மதிப்பு 13.45 லட்சம் கோடியாக உள்ளது.
மேலும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் நிகர லாபம் 2,403 கோடி. அது 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.2,973 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை விட நிகர லாபம் 23.63 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல, செயல்பாட்டு லாபம் ரூ.4,502 கோடியில் இருந்து 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.4,770 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டை விட 5.97 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
நிகர வருவாய் கடந்த ஆண்டு பதிவான ரூ.6,178 கோடியில் இருந்து இந்த ஆண்டு ரூ.6,359 கோடியாக அதாவது 2.93 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சொத்துகள் மீதான லாபமீட்டல் நிலை கடந்த ஆண்டு 1.20 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு உயர்ந்து 1.34 சதவீதமாக உயர்ந்து வளர்ச்சி கண்டிருக்கிறது. மேலும் நிகர லாபம் 2025ம் ஆண்டு மார்ச்சில் பதிவான ரூ.2,956 கோடி என்பதிலிருந்து ஜூன் மாதம் ரூ.2,973 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
டிஜிட்டல் சேனல்கள் வழியாக ரூ.57,955 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்த வாரா கடன்கள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 3.09 சதவீதமாக இருந்தது 3.01 ஆக குறைந்துள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் 10 இந்தியன் வங்கி கிளைகள் துவங்கப்பட்டுள்ளன. முதியோர்களுக்காக ஒரு சிறப்பு இந்தியன் வங்கி கிளை அடையாறில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு என்பது ரத்து செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி விதிக்கப்பட்ட அபராதமும் நீக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.