Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய விமானப்படை தாக்குதலில் தரைமட்டமான தீவிரவாத முகாமை மீண்டும் கட்ட பாக். அரசு நிதியுதவி: உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: இந்திய விமானப்படை தாக்குதலில் தகர்க்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை மீண்டும் கட்டுவதற்கு பாகிஸ்தான் அரசு நேரடியாக நிதி உதவி செய்வதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மே 7ம் தேதி இந்திய விமானப்படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் முரிட்கேவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மார்கஸ் தைபா தலைமையகத்தின் மீது துல்லிய வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் தங்குமிடங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன. இதன் மூலம் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய செயல்பாட்டு மையம் செயலிழக்கச் செய்யப்பட்டது. தரைமட்டமாக்கப்பட்ட இந்த மார்கஸ் தைபா மையம், லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதிகளின் வசிப்பிடமாக மட்டுமின்றி, பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தீவிரவாதப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி மற்றும் உளவுப் பயிற்சிகள் வழங்கும் மூளைச்சலவை மையமாகவும் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த பயங்கரவாத முகாமை மீண்டும் கட்டமைக்க பாகிஸ்தான் அரசே நேரடியாக நிதி உதவி செய்வதாக புதிய உளவுத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. புனரமைப்பு பணிகளுக்காக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே 4 கோடி ரூபாயை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு வழங்கியுள்ளது. இதன் மொத்த திட்டச் செலவு 15 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மவுலானா அபு ஜார் மற்றும் யூனுஸ் ஷா புகாரி ஆகிய மூத்த தளபதிகள் இந்த கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நாள், லஷ்கர் அமைப்பு நடத்தும் வருடாந்திர ‘காஷ்மீர் ஒற்றுமை தின’ மாநாட்டுடன் இணைத்து திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவது போன்ற போர்வையில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகளை பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு மடைமாற்றுவது இவர்களின் வாடிக்கையான செயலாகும். இதற்கு முன்னர் 2005ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, லஷ்கர் அமைப்பின் துணை அமைப்பான ஜமாத்-உத்-தாவா திரட்டிய நிதியில் சுமார் 80 சதவீதம் பயங்கரவாத முகாம்களைக் கட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதாக சர்வதேச தளங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்தாலும், அந்நாட்டு ராணுவமும், உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ெசயல்பாட்டுக்கு உடந்தையாக இருப்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடத்தை உளவு துறை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பயங்கரவாத முகாமை மீண்டும் கட்டமைக்கும் இந்த முயற்சி, பாகிஸ்தான் மண்ணிலிருந்து புதிய எல்லை தாண்டிய தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 2000ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மையம், ஆண்டுக்கு சுமார் 1000 பேருக்கு பயங்கரவாதப் பயிற்சி அளித்தது.

ஒசாமா பின்லேடன் இந்த வளாகத்தில் மசூதி மற்றும் விருந்தினர் மாளிகை கட்டுவதற்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி செய்திருந்தான். மேலும், 26/11 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் வழிகாட்டுதலின் பேரில் இங்குதான் உளவுப் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.