புதுடெல்லி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், தொடரை வெல்லும் முனைப்புடன், புதுடெல்லியில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா- ஆஸி அணிகள் மோதின.
முதலில் ஆட்டத்தை துவக்கிய ஆஸி அணி கேப்டன் ஆலிஸா ஹீலி 30 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீராங்கனை ஜார்ஜியா வால், பின் வந்த எலிசி பெரி உடன் இணைந்து அதிரடியாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 107 ரன் குவித்திருந்தபோது, ஜார்ஜியா, 81 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் எலிசி 68 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த பெத் மூனி, புயலாய் மாறி ரன்களை விளாசித் தள்ளினார்.
75 பந்துகளில், ஒரு சிக்சர், 23 பவுண்டரிகளுடன் அவர், 138 ரன்களை குவித்து ஓய்ந்தார். 47.5 ஓவரில், ஆஸி, 412 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. பின், 413 ரன் இலக்குடன் இந்திய மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் (10 ரன்), ஹர்லீன் தியோல் (11 ரன்) அவுட்டானபோதும், மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 63 பந்தில், 5 சிக்சர், 17 பவுண்டரிகளுடன் 125 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன் விளாசினார். பின் வந்தோரில், தீப்தி சர்மா சிறப்பாக ஆடி 72 ரன் குவித்தார். கடைசியாக, 47 ஓவரில், இந்தியா 369 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அதனால், 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.