ஒரு டாலர் ரூ.90ஐ நெருங்கியது இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: பிரதமர் மோடியை கேலி செய்த காங்.
புதுடெல்லி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து ரூ.90 ஐ நெருங்கி இருப்பது தொடர்பாக பிரதமர் மோடியின் முந்தைய பேச்சுக்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேலி செய்துள்ளது. உள்நாடு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் பரவலான விற்பனை அழுத்தம், வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில் இந்தியாவில் அமெரிக்காவுக்கான டாலர் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90ஐ நெருங்கி உள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சியாகும். கடந்த வெள்ளிக்கிழமை 98 காசுகள் சரிந்து ரூ.89.66 ஆன நிலையில், நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.46ல் தொடங்கியது. வர்த்தக முடிவில் 46 காசுகள் அதிகரித்து ரூ.89.20 ஆக உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதன் சுதந்திரமான வீழ்ச்சியை தொடர்கிறது. விரைவில் அது ரூ.90ஐ தாண்டப் போகிறது. 2013 ஜூலையில் பிரதமர் மோடி என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா?’’ எனக் கேட்டு பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குஜராத் முதல்வராக மோடி இருந்த போது காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு குறித்து பேசுகையில், ‘‘ரூபாய் எவ்வளவு வேகமாக வீழ்ச்சி அடைகிறது பாருங்கள். சில நேரங்களில் ரூபாய்க்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே போட்டி நடக்கிறது. அதன் கண்ணியம் வேகமாக குறைகிறது’’ என்றார். இதற்கு முன்பு, 2022 பிப்ரவரி 24ல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 99 காசுகள் சரிந்ததே அதிகபட்சமாகும்.



