Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இந்திய ரயில்வேயில் அடுத்தாண்டு அறிமுகமாகிறது: செயற்கை நுண்ணறிவு சரக்கு சேவை; வீட்டிலிருந்தே ரயில்கள் மூலம் பார்சல் அனுப்பலாம்

சென்னை: இந்திய ரயில்வேயில் செயற்கை நுண்ணறிவு சரக்கு சேவை வருகிறது. இனி வீட்டில் இருந்தபடியே ரயில்கள் மூலம் பார்சல்களை அனுப்பலாம். இந்திய ரயில்வே துறை தனது சரக்கு போக்குவரத்து சேவையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக, ROQIT என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ஒரு தனியார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தற்போது ரயில்வே மூலம் சரக்கு அனுப்ப வேண்டுமென்றால் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று காகிதத்தில் விவரங்கள் எழுத வேண்டும். அந்த சரக்கு எந்த ரயிலில் போகும் என்று தெரியாது. சரக்கு எங்கு உள்ளது என்று கண்காணிக்க முடியாது.

டெலிவரி எப்போது ஆகும் என்று உறுதியாக சொல்ல முடியாது. சரக்கை நாமே ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் பலரும் தனியார், பேருந்து, லாரி மற்றும் கூரியர் சேவைகளையே பயன்படுத்துகின்றனர். ரயில்வே சிறிய சரக்கு சந்தையில் மிகக் குறைவான பங்கையே கொண்டுள்ளது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய முழு டிஜிட்டல் சேவை மூலம் சரக்குகளை அனுப்பும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து கோவை, நெல்லை, மதுரைக்கு நாம் சரக்கு அனுப்ப வேண்டுமென்றால் சென்னை சென்ட்ரல் அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சரக்குடன் செல்ல வேண்டும்.

காகிதத்தில் படிவம் நிரப்ப வேண்டும். பண்டங்கள் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். சரக்கு எப்போது போகும், எப்போது சேரும் என்று தெரியாது. பெறுபவர் ரயில் நிலையத்திற்கு சென்று எடுக்க வேண்டும். இந்த முறையை தான் நாம் பார்த்து வருகிறோம். ரயில்வேயின் இந்த திட்டத்தில், மொபைலில் ROQIT செயலியை திறந்து சென்னை மயிலாப்பூர் முதல் கோவையில் உள்ள முகவரி கொடுக்கவும். சரக்கின் எடை மற்றும் விவரங்களை குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிட்ட பின்னர், 3 விருப்பங்கள் வரும்.

அதாவது சரக்கு சென்றடைய ஒரு நாளா.. அல்லது இரண்டு, மூன்று நாளா.. என காட்டும். விருப்பத்தை தேர்வு செய்து ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். அடுத்த நாள் உங்கள் வீட்டிலேயே வாகனம் வந்து சரக்கை எடுத்துச் செல்லும். சரக்கு எங்கு உள்ளது என்பதை மொபைலில் பார்க்கலாம் (எப்படி ஸ்விக்கி, சூமோட்டோவில் உணவு எங்கு வருகிறது என்று பார்ப்பது போல) குறிப்பிட்ட நேரத்தில் பெறுபவரின் வீட்டிலேயே சரக்கு வந்து சேரும். இந்த சேவை முதற்கட்டமாக 2026ம் ஆண்டு தொடக்கத்தில் தெற்கு மத்திய ரயில்வேயில் (ஐதராபாத், விஜயவாடா, திருப்பதி போன்ற பகுதிகளில்) சோதனை முறையில் தொடங்கப்படும். பின்னர், 2026 இறுதி முதல் 2027ம் ஆண்டுக்குள் படிப்படியாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்படும்.

இதுகுறித்து ROQIT நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில்,‘எங்களுக்கு வாகன துணை நிறுவனம் உள்ளது. அவர்கள் மின்சார வாகனங்களை உருவாக்குகிறார்கள். இந்த வாகனங்களை வீடு வரை சரக்கு எடுக்கவும் வழங்கவும் பயன்படுத்துவோம். இதனால் மாசு முற்றிலும் இல்லாத சரக்கு போக்குவரத்து சேவையை வழங்க முடியும்,’என்றார். இந்திய ரயில்வேயின் இந்த புதிய டிஜிட்டல் சரக்கு சேவை, அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஷாப்பிங்கை எளிதாக்கியது போல, சரக்கு அனுப்புவதை மிக எளிதாக்கும். 2026ல் தெற்கு மத்திய ரயில்வேயில் தொடங்கி, விரைவில் நாடு முழுவதும் இந்த சேவை கிடைக்கும். மக்களும் வணிகர்களும் மலிவான, வேகமான, நம்பகமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்கு சேவையை பெறுவார்கள். தொழில்நுட்பமும், பசுமை இயக்கமும் ஒன்று சேரும் போது இப்படி அற்புதமான மாற்றங்கள் சாத்தியம் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.