Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.120 கோடி கடன்பெற்று மோசடி செய்த வழக்கு பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளருக்கு சொந்தமான 6 இடங்களில் சிபிஐ சோதனை: பண மதிப்பிழப்பு காலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.120 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக சென்னை பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளருக்கு சொந்தமான 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணமதிப்பிழப்பு காலத்தில் பலகோடி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையை சேர்ந்த தொழிலதிபர் காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு பெரியளவில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

மேலும் சென்னை, கோவையில் நட்சத்திர ஓட்டல்களும் வைத்துள்ளார். இது தவிர பல்வேறு தொழில்களில் முதலீடுகள் செய்துள்ளார். இந்நிலையில் தொழிலதிபர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.120.84 கோடி நிறுவனம் சார்பில் கடன் பெற்றுள்ளார். ஆனால் வாங்கிய கடனை முறையாக செலுத்தாமல் பினாமி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் ஒன்றிய அரசால் ரூ.500, 1000 பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் சட்டவிரோதமாக பலகோடி ரூபாய் அவரது நிறுவனம் மற்றும் பினாமி நிறுவனங்களில் வைப்பு நிதியாக செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரு சிபிஐ அதிகாரிகள் ரூ.120 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து தொழிலதிபருக்கு சொந்தமான நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று காலை 7.20 மணிக்கு காரில் வந்த 6 சிபிஐ அதிகாரிகள் இரவு வரை சோதனை நடத்தினர்.

அதேபோன்று தென்காசி, திருச்சி, சென்னை உட்பட 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து மோசடியான கடன் பெற்றதற்கான ஆவணங்கள், பினாமி நிறுவனங்களுக்கு பணம் மாற்றியதற்கான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கியதற்கான ஆவணங்கள், பணமதிப்பிழப்பு காலத்தில் சந்தேகத்திற்கிடமாக வைப்பு நிதியாக செலுத்தியதற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். அந்த கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.