இருமல் மருந்து விவகாரம் ஒன்றிய அரசின் தோல்வியை காட்டுகிறது: இந்திய மருத்துவ சங்கத்தினர் குற்றச்சாட்டு
கோவை: கோவை புரூக்பீல்டு ரோடு சிரியன் சர்ச் அருகேயுள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் கட்டிடத்தில் சங்கத்தின் மாநில தலைவர் செங்குட்டுவன், செயலாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் ஒரு டாக்டர் பரிந்துரைத்த இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் இறந்தன. இது தொடர்பாக ஆய்வு செய்த போது இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு மருத்து அதிகளவில் கலந்து இருந்தது தெரியவந்தது. இது மிகவும் அபாயகரமான மருந்து.
முதலில் மருந்தை ஆய்வு செய்த ஒன்றிய அரசு மருந்தில் எந்த பிரச்னையும் இல்லை என கூறினர். ஆனால், தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் என்பதால் தமிழக அதிகாரிகள் நடத்திய சோதனையில் தான் மருந்தில் டை எத்திலீன் கிளைகால் அனுமதிக்கப்படும் 0.1 சதவீதம் பதிலாக 46 சதவீதம் இருந்தது கண்டறியப்பட்டது. டை எத்திலீன் கிளைகால் நரம்பு மண்டலம், நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றை விரைவாக தாக்க கூடியது. இந்த டை எத்திலீன் கிளைகால் கிலோ ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை ஐஸ் கட்டிகளை கரைக்கவும், அழகு பொருட்கள், பெயிண்ட் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி மருந்தில் கலந்தது என தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் மருத்துவருக்கு எவ்வித பொறுப்பும் இல்லை. அவரை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. தயாரிப்பு நிறுவனம் தான் தரத்திற்கு பொறுப்பாக முடியும். இருமல் மருந்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது ஒன்றிய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தோல்வியாக கூட எடுத்துக்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார். பேட்டியின்போது, ஐஎம்ஏ கோவை தலைவர் மகேஷ்வரன், செயலாளர் சீதாராம், குழந்தைகள் நல மருத்துவர்கள் துரைகண்னன், கார்த்திக் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.