இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு ரூ.127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளே காரணம் என குற்றம்சாட்டிய இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வௌியை பயன்படுத்த தடை விதித்து கடந்த ஏப்ரல் 24ம் தேதி உத்தரவிட்டது. இதேபோல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வௌியை பயன்படுத்த ஒன்றிய அரசு தடை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 4 நாள் போர் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு அதிகளவு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தி வௌியாகி உள்ளது.
இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை(ஆக.8) பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட ஏப்ரல் 24ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான இரண்டுமாத காலத்தில் பாகிஸ்தானுக்கு ரூ.127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த நிதி இழப்பு கிடையாது. ஆனால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.