Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய விவசாயமும் காலநிலை மாற்றமும்

காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக இருக்கிறது. மேலும், அதன் தாக்கம் விவசாயத்துறையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஏறக்குறைய 60 விழுக்காடு மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகிறது. இந்தியாவில் காலநிலை மாற்றம் என்பது மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. காலநிலை மாற்றத்தின் மிக முக்கிய விளைவாக திகழ்வது விவசாயத்தின் மீது அது ஏற்படுத்தும் தாக்கமாகும். அது பயிர் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறனில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வெப்பநிலை மாற்றம், சீரற்ற மழைப்பொழிவு முறைகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் என பாரம்பரியமான விவசாய நடைமுறையினை சீர்குலைக்கின்றன. உதாரணமாக வெப்பநிலை அதிகரிப்பு என்பது பல வகையான பயிர்களின் வளரும் பருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி விளைச்சலை குறைக்கிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் 2050- ஆம் ஆண்டில் கோதுமை விளைச்சல் 6 முதல் 23 சதவீதமாகவும், அரிசி விளைச்சல் 15 முதல் 42 சதவீதமாகவும் குறையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.கூடுதலாக ஒழுங்கற்ற மழைப்பொழிவுகள் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு வழிவகுக்கும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நீடித்த வறட்சியானது பயிர் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது. இது விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மாறாக கேரளா போன்ற மாநிலங்கள் தீவிரமான மழைப்பொழிவை சந்தித்துள்ளன. இதனால் பயிர்களை அழித்து, மண்ணரிப்பை ஏற்படுத்தி மண்வளத்தை அழிக்கும் பெருவெள்ளம் ஏற்படுகிறது. இந்த கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் நமது பாரம்பரிய விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாததாக மாற்றுகிறது.

காலநிலை மாற்றமானது மண்வளம் மற்றும் நீர்வளங்களின் இயல்பான தன்மையை மிகவும் பாதிக்கிறது. இவை இரண்டுமே விவசாய உற்பத்தியின் மிக முக்கிய காரணங்களாக உள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் மாறுபட்ட மழைப்பொழிவுகள் மண்ணரிப்பு, உப்புத் தன்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றின் மூலம் மண் சிதைவுக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான மழைப்பொழிவு நிகழ்வுகள் மண்ணரிப்பை அதிகரிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான வளமான மேலடுக்கு மண்ணை அது கழுவிவிடுகிறது. இத்துடன் தண்ணீர் பற்றாக்குறை மற்றுமொரு முக்கிய பிரச்னையாக இருக்கிறது. பருவமழையை பெரிதும் நம்பியுள்ள இந்திய விவசாயம் இதனால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டும் அண்மைக்காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. இது விவசாயத்தின் நிலைத்த தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றம் என்பது விவசாயத்தில் பங்களிக்கும் பூச்சிகள் மற்றும் நோய் பரவலை உருவாக்குகிறது. அதிகப்படியான வெப்பநிலை மற்றும் மாறுபட்ட மழைப்பொழிவுகள் பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்க் கிருமிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. உதாரணமாக இலையுதிர் படைப்புழு போன்ற பூச்சிகள் மற்றும் கோதுமையில் துரு போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து பயிர்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த பூச்சிகளும், நோய்களும் விளைச்சலை குறைப்பதுடன் பூச்சி மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டுச் செலவுகளையும் அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதலான நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை போக்குவதற்கு இந்திய விவசாயிகள் மற்றும் ஆய்வாளர்கள் பல்வேறு உத்திகளை கடைபிடித்து வருகின்றனர். தட்பவெப்ப நிலையை எதிர்க்கும் பயிர் வகைகளை உருவாக்குவதும் அதை பரப்புவதும் மிக முக்கிய அணுகுமுறைகளில் ஒன்றாக திகழ்கிறது. அதிக வெப்பநிலை, வறட்சி மற்றும் உப்புத் தன்மையை தாங்கும் வகையில் பயிர்களை மரபணு மாற்றம் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியை எதிர்க்கும் அரிசி மற்றும் கோதுமை வகைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறைகள் பாரம்பரிய வெள்ளப் பாசனத்தை விட திறமையானவை. அது தண்ணீரை சேமிக்க பெரிதும் பயன்படுகிறது. கூடுதலாக வறட்சியின் போது நீர் இருப்பை அதிகரிக்க மழைநீர் சேகரிப்பு மற்றும் தடுப்பணைகள் கட்டுதல் ஆகிய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. விவசாயம், பயிர் வளர்ப்பு, இயற்கை உர பயன்பாடு போன்ற நடைமுறைகளை உள்ளடக்கிய பாதுகாப்பான விவசாயம் மண்ணின் வளத்தை பாதுகாக்கிறது. வேளாண் காடு வளர்ப்பு, மரங்கள் மற்றும் புதர்க்காடுகளை உருவாக்குதல் அவற்றோடு கால்நடை வளர்ப்பினை ஒருங்கிணைத்தல் போன்றவை சிறப்பான பலனைத் தருகிறது.

விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் துல்லியமான வானிலைத் தகவல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நடவு மற்றும் அறுவடை குறித்த ஆரோக்கியமான முடிவுகளை அவர்கள் எடுக்க வழிவருகிறது. இதனால் தேவையற்ற நட்டத்தை குறைக்க அது உதவுகிறது. காலநிலை மாற்றம் இந்திய விவசாயத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. பயிர் விளைச்சல், மண்வளம், நீர் வளம், பூச்சிகள் மேலாண்மை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவற்றை பாரம்பரிய அறிவு, தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகள் மூலம் மாறி வரும் சூழலை எதிர்கொள்ளும் திறன் கொண்ட வளமிக்க விவசாய முறைகளை இந்திய நாட்டினால் உருவாக்க முடியும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையை எட்ட அரசும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்பது அவசியம்.

- பொறியாளர்

சுரேஷ் கோபாலகிருஷ்ணன்